Saturday, May 23, 2009

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்1


உலக, பிராந்திய வல்லரசுகளின் ராணுவ, பொருளாதாரப் பசிக்கு இரையாகியிருக்கிறது ஈழத்தமிழர்களின் தாய்நிலமும், பல்லாயிரம் உயிர்கள். அனைவரும் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் ஈழத்தில் இனப்படுகொலைக்காக வளைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ‘மனிதாபிமான போர் இடைநிறுத்தம்’ என்று தவணை முறையில் மனிதாபிமானம் பேசியது வெட்கம் கெட்ட கொலைகாரக் கூட்டம். வன்னியில் இரத்தப் படுகொலையை நடத்திய இந்தியா தடையங்களை அழிப்பதிலும், சர்வதேச அரங்கில் சிறீலங்காவை பாதுக்காக்கவும் திட்டமிட்டு செயல்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறையும், ஐ.நாவில் பணியாற்றுகிற இந்திய அதிகாரிகளும் இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பெரும் திட்டத்திற்கு துணிந்து உதவுகிறார்கள்.

வன்னியில் இனப்படுகொலை நடந்த போது முதலில் இலங்கைக்கு ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்சை இலங்கைக்கு அனுப்பினார் பான் கீ மூன். இலங்கையிலிருந்து திரும்பிய அவர் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகள் பற்றிய அறிக்கையை ஐ.நாவுக்கு கொடுக்கும் முன்னரே கொலம்பியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விசயத்தில் ஐ.நாவின் போக்கு சந்தேகங்களை உருவாக்கியது. அதன் பின்னர் விஜய் நம்பியார் மேற்கொண்ட பயணங்களிலும் ஐ.நா சபையின் நடவடிக்கைகள் மீது பலத்த சந்தேகங்கள் எழும்புகின்றன.

லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தினால் பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுன் இலங்கைக்கான சிறப்புத் பிரதிநிதி ஒருவரை நியமித்தார். அவரை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதன் பிறகு பிரிட்டன் ஐ.நாவுக்கு சில நெருக்கடிகளை கொடுக்கத் துவங்கியது. இந்த நிலையில், எப்பிரல் 16, 2009 அன்று ஐ.நா மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான நடவடிக்கைகளை எடுக்க பொதுச்செயலாளர் பான் கீ மூன் விஜய் நம்பியாரை தனது சிறப்புத் தூதுவராக வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக அனுப்பினார். இன்னர்சிற்றி பிரஸ், மேத்யூ ரஸ்ஸல் லீ அதை வெளிப்படுத்திய பிறகு உலகம் இந்த பயணம் பற்றி அறிந்தது. அப்போது ஐ.நா மீதான சந்தேகம் வலுவடைய ஆரம்பித்தது. இந்த பயணத்தில் விஜய் நம்பியார் வன்னியிலுள்ள ‘முகாம்களை’ பார்வையிட்டு, ராஜபக்சே அரசிடம் பேச்சுக்களை நடத்தி, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை கொடுப்பாரென்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பயணத்தில் இருந்த போது ஐ.நா பணியாளர்கள் சிலர் சிறீலங்கா அரசினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ‘வதை முகாம்களில்’ தமிழ்மக்கள் ராணுவ கட்டுப்பாடு, அச்சுறுத்தல், சித்திரவதையை அனுபவிப்பதாக செய்திகள் வந்தன. ‘பாதுகாப்பு வலையம்’ மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியது சிறீலங்கா. ‘முகாம்கள்’ எவற்றையும் பார்வையிடாமல், சிறீலங்காவின் இன அழிப்பு போரை கண்டிக்காமல் பயணத்தை முடித்தார் விஜய் நம்பியார். மனித உரிமை ஆர்வலர்களை இச்செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

ஏப்பிரல் 20, திங்கள் கிழமை அறிக்கை கொடுக்க வேண்டிய விஜய் நம்பியார் ஏப்பிரல் 23, புதன்கிழமை இரவு வரையில் ஐ.நாவுக்கு திரும்பவில்லை. வன்னியில் மக்களின் நிலவரத்தை அறிந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பித்து ஆலோசனைகளை வழங்கும் கடமையுள்ள விஜய் நம்பியார் கொழும்பு பயணம் முடித்ததும் சென்ற இடம் இந்தியா. இந்தியாவிற்கு விடுமுறைக்காக சென்றதாக சொல்லப்பட்டது. வன்னியில் மக்களின் அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த அவசரமான சூழலில், பயணத் திட்டத்தில் இல்லாத விடுமுறைக்கு தனது சொந்த நாடான இந்தியாவிற்கு விஜய் நம்பியார் செல்ல வேண்டிய அவசரத் தேவையென்ன?

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் அனைத்தையும் ஏப்பிரல் முதல் வாரத்திற்குள் கைப்பற்றும் திட்டம் எதிர்பார்த்ததை விடவும் நாட்கள் அதிகமாகியது. ஏப்பிரல் 25ற்குள் விடுதலைப்புலிகளின் கதையை முடித்து, நிலங்களை மீட்டு விடுவோமென்று சிறீலங்கா பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கு கால அவகாசம் கொடுக்க விஜய் நம்பியார் இந்தியா சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதற்கும் மேலாக விஜய் நம்பியார் புது டில்லியின் அதிகார வர்க்கத்திடம் ஆலோசிக்க இந்தியா சென்றிருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஏப்பிரல் 23, வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புச்சபை கூட்டத்துக்கு திரும்பிய அவர் சிறீலங்கா பற்றிய அறிக்கையை கொடுக்க மறுத்தார். வழக்கமாக ஊடகங்களை சந்திக்கும் விஜய் நம்பியார் ஊடக சந்திப்பை தவிர்த்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இடம்பெறும் நாடுகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விஜய் நம்பியாரின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் சிறீலங்கா மீதான அலுவலக ரீதியான கண்டனங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவை வழி ஏற்படுத்தி, போரை நிறுத்த நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்பிருந்தது. விஜய் நம்பியாரின் அணுகுமுறை சிறீலங்காவை காப்பாற்றும் உள்நோக்கம் கொண்டிருந்ததை இதில் உணரமுடியும்.

விஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார் சிறீலங்காவின் ராணுவ ஜெனரல் போரில் சிறீலங்கா ராணுவத்தையும், சரத் பொன்சேகாவையும் பாராட்டி எழுதியுள்ளார் (சதீஸ் நம்பியார் பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்). சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்கள், பொருளதவி, ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் வல்லுநர்களை அனுப்பி மறைமுகமாக யுத்தத்தை இந்தியா நடத்திய நிலையில், இந்திய குடியுரிமையுள்ள விஜய் நம்பியாரை ஐ.நா அனுப்பியது பற்றி ராஜதந்திர மட்டங்களிலும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இந்தியாவில் மன்மோகன் சிங் ஆட்சியில் 2005ல் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக 2005ல் பணியாற்றியவர் தான் விஜய் நம்பியார். விஜய் நம்பியார் ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னானின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். பான் கீ மூன் ஐ.நா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதும் ஜனவரி 2007ல் ஐ.நா தலைமை அதிகாரியாக விஜய் நம்பியாரை நியமித்தார். விஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல். சதீஸ் நம்பியார் (ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி) ஈழப்போராட்ட சிக்கலில் முக்கிய பங்கு வகித்தவர். வெளியுறவுத்துறையின் Foreign Affairs Instituteல் விஜய் நம்பியாரும், சதீஸ் நம்பியாரும் அழைப்பின் பேரில் பங்கெடுத்து வருகிறார்கள். ராணுவ சம்பந்தமான United Service Institution of India ஜூலை 1996 முதல் டிசம்பர் 31, 2008 வரையில் இயக்குநராக சதீஸ் நம்பியார் இருந்திருக்கிறார். சிறீலங்கா அரசுக்கு ராணுவ ஆலோசனைகளை வழங்கி வந்தவர் சதீஸ் நம்பியார்.

ஐ.நா அதிகாரியின் கடமையும், பொறுப்பும் சொந்த நாட்டின் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் பிரச்சனைக்குரிய இடங்களுக்கு அவற்றில் தொடர்புடைய நாடுகளின் குடியுரிமை கொண்டிருக்கும் அதிகாரிகளை வழக்கமாக பிரதிநிதிகளாக அனுப்புவதில்லை. அதற்கு மாறாக சிக்கலான அளவு தொடர்புடைய விஜய் நம்பியாரை இலங்கைக்கு சிறப்புத் தூதுவராக பான் கீ மூன் அனுப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

பாகம் 2 அடுத்த பதிவில் தொடர்கிறது...

4 பின்னூட்டங்கள்:

- யெஸ்.பாலபாரதி said...

தொடருங்கள் அண்ணா..

மவுணமாக தொடர்கிரேன் நானும்! :(

ttpian said...

i hate Malayalees:they charted a plan to kill tamil community: I am not an indian:i am a tamilian:

thiru said...

//ttpian said...
i hate Malayalees:they charted a plan to kill tamil community: I am not an indian:i am a tamilian://

ttpian,

உங்கள் கருத்தில் உடன்பாடில்லை. தமிழராக இருப்பதற்காக மலையாளிகளை வெறுக்க அவசியமில்லை. மலையாளிகள் அனைவரும் தமிழின படுகொலைக்கு உதவினார்களா? தமிழர்கள் அனைவரும் வன்னிப் படுகொலையை கண்டித்தார்களா? இல்லையே! இனவெறுப்பை நோக்கி செல்லக் கூடாது.

Anonymous said...

ஈழப் படுகொளைக்கு காரணம் சிங்களவனும் அல்ல மலயாளியும் அல்ல,தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழன்தான் காரணம். கூப்பிடு தூரத்தில் இருந்தும் கேட்டும் கேளாதவராய், கண்டும் காணாதவராய் உணர்ச்சி அற்று உணர்வு அற்று, அவ்வளவு ஏன், சிறிதளவு கூட மனிதநேயம் இல்லாமல் போன தமிழர்கள்தான் காரணம்.பஞ்சாப் மாநிலத்தில் இன்று போராட்டம் வெடித்துள்ளது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்தை ஈர்த்து கவலைப்பட வைத்துள்ளது,.ஏன் எதற்கு அந்த போராட்டம் ? கண்காணாத தூரத்த்தில் வியன்னாவில் நேற்று ஒரு சீக்கிய ஆலயம் தாக்கப்பட்டதாம்.அதுதான் காரணம், வெளிநாட்டில் ஒரு சீக்கியன் தாக்கப்பட்டால், சீக்கிய இனத்துக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டு மொத்த பஞ்சாப் மாநிலமும் கொழுந்து விட்டு எரியும். அது இன உணர்வு. ஆனால் அந்த இன உணர்வு தமிழனுக்கு கிடையாது.தமிழகத் தமிழன் டாஸ்மாக் சாராயத்திலும், நமீதாவின் மாமிசத்திலும் கிறங்கிப் போய் கிடக்கிறான்.பலர் பதவிக்காக ஊர்ந்தும், தவழ்ந்தும் மண்டியிட்டு பிச்சை எடுக்கின்றனர். ஏனையோர் ஆளும் வர்க்கத்துக்கு துணை போய் அடிவருடி வாழ்கின்றனர். அருகாமையில் சித்திரவதைப் படும் ஈழத்தமிழனை குறித்து அங்கு கவலையே கிடையாது.தமிழனுக்கு எதிரி தமிழன்தான்.தமிழனை சுரண்டுபவன் தமிழன், தமிழனை ஏய்ப்பவன் தமிழன், தமிழனை ஏமாற்றுபவன் தமிழன், தமிழனை அழிப்பவன் தமிழன்.இதுதான் இன்று உண்மை.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com