Thursday, January 15, 2009

ஈழம்: பொத்தக சந்தையில் ஒரு உரையாடல்

சென்னை 'பொத்தக சந்தை' கடையொன்றில் பொத்தகங்களை புரட்டிய வேளை, கடைக்காரரோடு முதியவர் ஒருவரின் உரையாடல் காதில் விழுந்தது. கவனிக்க ஆரம்பித்தேன்.

'அது தான் யுத்தம் முடிஞ்சு போச்சு இல்ல. அப்புறமென்ன?'

'சார் யுத்தம் எங்கே நின்றது?' கடைக்காரர்.

'அப்படியா! அது தான் கிளிநொச்சியை பிடிச்சிட்டாங்கள்ல' விடாப்பிடியாக முதியவர்.

‘சார்! கிளிநொச்சி பிடிச்சது எல்லம் சரி. ஆனா இன்னும் துவங்கவே இல்ல சார்!’ மீண்டும் கடைக்காரர்.

முதியவர் விடுவதாக இல்லை. ‘என்ன சார் பஞ்சம் பொழைக்க தேயில தோட்டத்துக்கு வேலைக்கு போனவா எதுக்கு சார் அவங்க நாட்ல பங்கு கேக்குறாங்க. அது சரியா சார்? இப்ப என்னோட மக, பேத்தி எல்லாம் அமெரிக்கால இருபது வருசமா இருக்கா. அவா எல்லாம் எங்களுக்கும் அமெரிக்கால பங்கு குடுண்ணு கேக்க முடியுமா சார்?’

‘சார்! நீங்க சொல்லுறது சரியில்ல சார். அது அவங்க சொந்த நாடு சார். பஞ்சம் பொழைக்க போனவங்க இல்ல சார்.’

முதியவர் விடுவதாக இல்லை. மௌனமாக இருப்பதை விட பேசுவதே மேல். முதியவரோடு உரையாட ஆரம்பித்தேன். இலங்கையில் வாழ்ந்த/வாழு(டு)ம் பூர்வீக தமிழர்கள், மலையகத்தில் காலனியாதிக்க காலத்தில் அடிமைத்தனமான வேலைக்கு குடியேற்றப்பட்ட தமிழக (இந்தியத்) தமிழர்கள் பற்றி புரிய வைக்க முனைந்தும் முதியவர் பழைய நிலையை விடுவதாக இல்லை. தொடர்ந்தது உரையாடல்…

‘ஈழத்தின் இன்றைய இனப்படுகொலைக்கும், போருக்கும் இந்தியா மிகமுக்கிய காரணம்’ என்ற போது முதியவரின் தேசப்பற்றும், ‘இந்திய தேசியமும்’ ஏற்றுக்கொள்ள மறுத்தது. இலங்கையில் அமைதி உருவாக்க இந்தியப் படை சென்றதாகவும், ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க இராசீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உருவாகியதாகவும் நம்பும் ‘அப்பாவி இந்தியர்களில்’ இவரும் ஒருவர். தமிழகத்திலும்/இந்தியாவிலும் ஊடகங்கள் ஈழம் பற்றி உருவாக்கி வைத்துள்ள கற்பிதங்களும், கற்பனைகளும் முட்டாள்த்தனமாக பொதுக்கருத்தை உருவாக்கியுள்ளது. ஊடகங்களின் இந்த போக்கு பாசிசம் வளர ஆதரவாகவுள்ளது. முதியவர் விரும்பி வாசிக்கும் ‘த இந்து’, ‘பிரண்ட்லைன்’ சொல்லும் செய்தியை நம்பியிருக்கிறார். ‘ஈழத்தில் இனப்படுகொலை பற்றிய செய்திகளை மறைத்து பொய்களை புனைவதில் வடநாட்டு ஊடகங்களுடன், ‘த இந்து’, ‘பிரண்ட்லைன்’ முன்னணியில் இருக்கிறது’ என்றதும் பெரியவர் அதிர்ந்து போனார்.

இந்திய ஊடகங்களின் அடிநாதமாக விளங்கும் ஆதிக்கச்சாதி அரசியல் ஈழத்தின் நியாயங்களை மறுத்து, எதிர்த்து, அபாயகரமாக கட்டுக்கதைகளை உற்பத்தி செய்கிறது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயல்படும் இந்த ஆதிக்க தேசியத்தின் அரசியலை எதிர்கொள்ளாமல் விடுதலை சாத்தியமாகுமா?

21 பின்னூட்டங்கள்:

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

Anonymous said...

இலங்கைத் தமிழர் பிரசினையில் இந்துவின் கருத்திற்கும்,காங்கிரஸ் கட்சியின் கருத்திற்கும் வேறுபாடு
இல்லை.இரண்டுமே விடுதலைப்
புலிகளை எதிர்க்கின்றன.ஈழம் என்ற
கருத்தினை நிராகரிக்கின்றன.காங்கிரஸ்
முன்வைக்கும் கருத்திற்கும் ஆதிக்க
சாதி(கள்)தான் காரணமா?.இல்லை
வேறு காரணங்கள் உண்டா?.

karu said...

your worries 100% correct

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

வெற்றி said...

/* இலங்கையில் அமைதி உருவாக்க இந்தியப் படை சென்றதாகவும், ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க இராசீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உருவாகியதாகவும் நம்பும் ‘அப்பாவி இந்தியர்களில்’ இவரும் ஒருவர். */

இப்படியான "அப்பாவி இந்தியர்கள்" பலரை சந்தித்த அனுபவம் எனக்கும் உண்டு.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தினமலர், துக்ளக் படிக்கும் என் தோழியும் முதியவரின் கருத்தைக் கொண்டிருக்கிறாள் :( நடுத்தரக் குடும்பங்களில் தினமலர் நன்கு வாசிக்கப்படுவதால், இந்து, பிரன்ட்லைன், துக்ளக்கை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடுநிலையான கருத்துகளைச் சொல்லும் வலிமையான மாற்று ஊடக நிறுவனங்கள் முக்கிய தேவை.

thiru said...

//Anonymous said...

இலங்கைத் தமிழர் பிரசினையில் இந்துவின் கருத்திற்கும்,காங்கிரஸ் கட்சியின் கருத்திற்கும் வேறுபாடு இல்லை.இரண்டுமே விடுதலைப்புலிகளை எதிர்க்கின்றன.ஈழம் என்ற
கருத்தினை நிராகரிக்கின்றன.காங்கிரஸ்
முன்வைக்கும் கருத்திற்கும் ஆதிக்க
சாதி(கள்)தான் காரணமா?.இல்லை வேறு காரணங்கள் உண்டா?.
1/15/2009 08:37:00 AM//

நண்பருக்கு,

விரிவாக பேசப்பட வேண்டிய விசயம். ஈழம் விசயத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல, மார்க்சிஸ்டுகளும் இந்துவின் கருத்தில் உடன்பாடுடையவர்கள். பா.ஜ.க கனவான 'அகண்ட பாரத' இந்துத்துவ தேசியமும் ஈழத்துக்கு சார்பானதல்ல. ஈழம் பற்றிய கட்சிகளின் நிலைபாடு தேசிய இனங்களின் விடுதலை, சுயஉரிமை பற்றிய கொள்கை நிலைபாடுகளின் பிரதிபலிப்பு. இந்த நிலைபாடுகளுக்கு 'ஆதிக்கசாதி' அரசியலும் மிகப்பெரும் துணையாக இருக்கிறது (அது மட்டுமே காரணமல்ல). இந்திய கட்சிகள் தேசிய இனங்களின் சுய உரிமை விசயத்தில் என்ன கொள்கை நிலைபாடு கொண்டுள்ளன என்பது பற்றிய விரிவான உரையாடல் வேண்டும்.

thiru said...

// ரவிசங்கர் said...

தினமலர், துக்ளக் படிக்கும் என் தோழியும் முதியவரின் கருத்தைக் கொண்டிருக்கிறாள் :( நடுத்தரக் குடும்பங்களில் தினமலர் நன்கு வாசிக்கப்படுவதால், இந்து, பிரன்ட்லைன், துக்ளக்கை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடுநிலையான கருத்துகளைச் சொல்லும் வலிமையான மாற்று ஊடக நிறுவனங்கள் முக்கிய தேவை.
1/15/2009 08:58:00 AM//

உண்மை ரவி!

தினமலரும், துக்ளக்கும் உருவாக்குகிற அபத்தமான/ஆபத்தான அரசியல் நடுத்தர வர்க்கம், இடைநிலை சாதியினர் மத்தியில் ஆழமான தாக்கத்தை உருவாக்குகின்றன. ஈழத்தை தினமலரும், துக்ளக்கும், இந்துவும் ஏன் எதிர்க்கிறார்கள்? அதற்குள் இருக்கும் அரசியலை புரியும் நிலையில் இருக்கிறதா தமிழ்/இந்திய சமூகம்?

1990களின் சைக்கிள் திருட்டு போனாலும் கொட்டை எழுத்துக்களில் ஈழத்து அகதிகளை குற்றவாளியாக்கிய இந்த ஊடகங்கள், இன்றும் அகதிகள் முகாமில் முடக்கப்பட்டு, 60 ரூபாய் ஊதியத்திற்கு கடுமையான வேலை பார்ப்பது பற்றி எழுதவில்லை. படிக்க அனுமதி மறுக்கப்பட்டும், வாய்ப்பில்லாமலும் படிப்பை பாதியில் நிறுத்திய ஈழத்து சகோதர்கள் பற்றி எழுதவில்லை.

மாற்று ஊடகங்கள் ஏன் உருவாகவில்லை என்பது பற்றியும் நாம் பேச வேண்டும். மாற்று ஊடகங்களின் தேவையை உணர்பவர்களும் மேற்படி ஊடகங்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் நிலையையும் காணமுடிகிறது.

சாணக்கியன் said...

அந்தப் பெரியவரைப்போன்று எதிர்மறை கருத்துகூட இல்லாமல் ஆதித்தமிழர்கள் பலரும் ‘மானாட மயிலாட’-வில் திளைத்து மயங்கி களித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களை என்ன செய்யப்போகிறோம்?

Anonymous said...

I came to india in 2006 and when a worker in a hotel found out we are eelam tamils he asked 'you went there to earn money and why are you asking for a separate state?'
I spent 2 hours telling him the history of eelam tamils and told him 'we have been living there for thousands of years and we are the original people of srilanka just like the sinhalese.there are tamils in srilanka who went during british rule from india to work in tea estates but they are called upcountry or indian origin tamils and they are not asking for separate country and they are only asking for more political social and economical rights'
He thanked me for giving him a history lesson.
many people in tamil nadu still think eelam tamils are 'vantheries'.
the mass medias like thinamalar are hiding the true history and making people believe that eelam tamils are some sort of trouble makers and president Rajapakse is a true democratic man who is so nice and gentle.
It is the duty of the tamil loyalists in tamil nadu to make awareness among ordinary people by highlighting it in mass media.

thiru said...

// சாணக்கியன் said...
அந்தப் பெரியவரைப்போன்று எதிர்மறை கருத்துகூட இல்லாமல் ஆதித்தமிழர்கள் பலரும் ‘மானாட மயிலாட’-வில் திளைத்து மயங்கி களித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களை என்ன செய்யப்போகிறோம்?
1/15/2009 09:51:00 AM//

அந்தப் பெரியவர் மீது எந்த கோபமும் இல்லை. அவரைப் போன்ற பலரும் ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தையும் சிந்திக்காமல் நம்பிவிடுகின்றனர். 'மானாட மயிலாட' மயக்கத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நிமிடமும் பெரியார் பெயரைச் சொல்லி தொ(ல்)லைக்காட்சி நடத்துபவர்களின் பொறுப்பையும் பேச வேண்டும். மயக்கமும், போதையும் மக்களை சிந்திக்க அனுமதிக்காது தடுக்கும் வரையில் ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம். பெரியார் சிந்திக்க சொன்னார். இவர்கள் மயங்க சொல்கிறார்கள்.

ரவி said...

அவாளுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது சார்...

உங்க சக்தியை வேஸ்ட் பண்ணிட்டேள் நீங்க...

கலை said...

அப்படின்னா, இன்னும்கூட நிறையப் பேர் இலங்கை வரலாறு தெரியாமலே இருக்காங்களா? :(

தருமி said...

//பெரியார் சிந்திக்க சொன்னார். இவர்கள் மயங்க சொல்கிறார்கள்.//

அதே!
ஊடகங்கள் நம்மில் இன்னும் 'வயதுக்கு' வர மறுக்கின்றனவே!

Anonymous said...

I read that Thinamalar,Thinamani and Thinakaran haven't mentioned anything about Thirumavalavan's fast in support of eelam tamils.
It shows the media in tamil nadu is trying it's best to hide the truth from the people and generally keep them ignorant and devoid of any ethno linguistic identity.
I am surprised even the so called 'dravidian' owned Thinkaran is becoming like Thinamalar.

thiru said...

//Blogger செந்தழல் ரவி said...
அவாளுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது சார்...

உங்க சக்தியை வேஸ்ட் பண்ணிட்டேள் நீங்க...
1/15/2009 10:28:00 PM//

ரவி,

ஈழம்/தேசிய இனங்களின் விடுதலை பற்றிய புரிதல் அற்ற/எதிர் நிலை பலரிடமும் இருக்கிறது. உரையாடலின் இறுதியில் அந்த முதியவர் திறந்த மனதுடன் சென்றதை கண்டேன். குறைந்தபட்சம் அவருக்கு ஊடகங்கள் காட்டாத பக்கங்கள் இருப்பதும் புரிந்திருக்கும். அந்த விதத்தில் பயனுள்ள உரையாடல்.

thiru said...

//கலை said...
அப்படின்னா, இன்னும்கூட நிறையப் பேர் இலங்கை வரலாறு தெரியாமலே இருக்காங்களா? :(//

கலை, இலங்கையின் வரலாறு என்ன? தங்களது அடையாளங்களையே அறியாமல் தான் தமிழ்ச்சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள். அஜீத், விஜய்...சினிமா நட்சத்திரங்களின் தகவல்கள் அனைத்தும் அறிந்திருக்கும் சமூகத்தில் 50 ஆண்டுகால தமிழக/இந்திய அரசியல் அடிப்படை பற்றிய அறிவில்லை. ஈழத்தமிழர்கள் பஞ்சம் பொழைக்க இலங்கைக்கு போனவர்கள் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு இன அடிப்படையில் ஈழத்தமிழர்களின் விடுதலையை எதிர்க்கும் சக்திகள் காரணமாக இருப்பது உண்மை தான். ஈழத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கும்/கொடுக்க வேண்டியவர்கள் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும், உலகத்திற்கும் ஈழம் பற்றிய புரிதலை ஏற்படுத்த தவறியிருக்கிறார்கள்.

ஈழம் பற்றிய தொடர்களும், செய்திகளும், கட்டுரைகளும், நேர்காணல்களுமாக இன்று வியாபாரம் நடத்துகிற வெகுசன ஊடகங்கள் சில வருடங்களுக்கு முன்னர் வரையில் ஈழம் பற்றிய செய்திகளை கவனத்தில் கொள்ளவில்லை. பெரும்பான்மை மக்கள் காட்சி ஊடகங்கள் தரும் செய்திகளை பிசகாமல் அப்படியே நம்புகிறார்கள். சன், கலைஞர், ராஜ் போன்ற காட்சி ஊடகங்களில் ஈழம் பற்றியும், தேசிய இனங்களின் விடுதலை பற்றியும் வந்திருக்கிறதா? "'உலகத்தில் முதல்முறையாக' _____ _______ நடிக்கும் _______ படம் காணத்தவறாதீர்கள்!" தொடர்ந்து தமிழ்ச்சமூகத்தின் செவிப்பறைகளை கிழிக்கும் இந்த ஒலிகள் திராவிட இயக்க பின்னணி இசையுடன் வருகின்றன. தொடர்களையும், திரைப்படங்களையும் ஒளிபரப்பினால் 'கரன்சி' கிடைக்கும். ஈழம் அல்லது வேறு சமூகப்பிரச்சனைகளை ஒளிபரப்பினால் என்ன கிடைக்கும்? இவற்றை வெளிப்படையாக பேச கூட நாதியற்று கிடக்கிறது தமிழ்ச்சமூகம்.

thiru said...

// kumaran said...
I read that Thinamalar,Thinamani and Thinakaran haven't mentioned anything about Thirumavalavan's fast in support of eelam tamils.

It shows the media in tamil nadu is trying it's best to hide the truth from the people and generally keep them ignorant and devoid of any ethno linguistic identity.

I am surprised even the so called 'dravidian' owned Thinkaran is becoming like Thinamalar.//

தினமலருக்கு தமிழர்கள் குறைந்தபட்ச உரிமை பெறுவதில் கூட உடன்பாடு இருக்க வாய்ப்பில்லை. ஈழத்தில் மக்கள் போருக்கு முகம் கொடுத்து வாடும் நேரத்தில் தினமலர் பேரினவாத பாசத்தை செவ்வனே செய்கிறது.

'திராவிடர்' நிர்வகிக்கும் ஊடகங்கள் பற்றிய உங்கள் கேள்வி, கடந்த இருபது ஆண்டு கால தமிழக அரசியலை ஒட்டியும், வெட்டியும் வருவது. கலைஞர் என்ன சொல்கிறார்? ஜெயலலிதா அறிக்கை என்ன சொல்கிறது? என்பதை பார்த்து அதற்கு ஏற்பவும், எதிராகவும் கருத்து சொல்ல பழக்கப்பட்ட சூழலில் இருக்கிறோம். கலைஞர் தமிழ்ச்செல்வனுக்கு கவிதை எழுதினாரா? உடனே உணர்ச்சிகளை வார்த்தையாக்குவது. புதுடில்லியின் முடிவு தான் எங்கள் முடிவு சாமியோவ் என்கிறாரா கலைஞர் 'ஆமாம் சாமி!' என்று மௌனிப்பதும் திராவிட பின்னணி ஊடகங்களின் அரசியல். மென்மையான பார்ப்பனீய வடிவம் கொண்ட காங்கிரசுடன் கலைஞர் தமிழகத்தில் கூட்டணியில் இருக்கும் நிலையில் திராவிட ஊடகங்களும் இதற்கு மேல் பேசுமென்ற நம்பிக்கையில்லை. ஜெயலலிதாவை தடுத்து ஆட்சியில் தொடர காங்கிரஸ் சொல்வதை கேட்கும் நிலையில் இருக்கிறார் கலைஞர்.

தினமலர், துக்ளக், இந்து போன்ற ஊடகங்களைப் பொறுத்த வரையில் ஈழத்திற்கு அன்றும், இன்றும், என்றும் எதிர்நிலை. இதே போன்ற பார்ப்பனீய சிந்தனையில் புதுடில்லியில் அதிகாரவர்க்கம் ஒன்றும் செயல்படுகிறது. இவர்கள் இலங்கை பேரினவாதத்திற்கு ஆதரவான களத்தை இந்திய அரசியல், ஆட்சியியல், உலக அரங்குகளில் உருவாக்குகிறார்கள். இந்திய அதிகாரவர்க்கத்துக்கு தேசிய இன விடுதலையை எதிர்க்க 'இந்திய தேசியம்' அடிப்படை காரணம். 'மாநில சுயாட்சி' பேசியவர்கள் இந்திய தேசிய மாயையை மெல்ல ஏற்றுக்கொண்டாயிற்று. இனி என்ன எல்லாம் 'புதுடில்லி செயல்' என்று போட்டாயிற்று.

thiru said...

//Blogger தருமி said...
ஊடகங்கள் நம்மில் இன்னும் 'வயதுக்கு' வர மறுக்கின்றனவே!
1/16/2009 04:43:00 AM//

அய்யா,

நமது ஊடகங்களிடம் சொந்த சரக்கு பஞ்சம். அமெரிக்க காட்சி ஊடகங்களிலிருந்து நிகழ்ச்சிகளை அப்படியே எடுத்து, தமிழக திரைப்படங்களை கலந்து தருவதை தவிர புதியதாக காட்சி ஊடகங்கள் என்ன செய்கின்றன? மக்கள் தொலைக்காட்சி தவிர பிற காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் திரைப்படங்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் கலவை. 'வயதுக்கு' வந்தால் சிந்திக்க தூண்டும். அதன் விளைவு அரசியலில் தெரியும். அரசியல்கட்சிகளின் பின்னணியில் ஊடகங்கள் இயங்கும் போது மக்களுக்கு எதை, எப்படி, எப்போது சொல்வது என்பதையும் தீர்மானிக்கிறது. ஊடக அரசியலின் ஆபத்தான இந்த போக்கை பணம் கொடுத்து பயன்பெறுகிறோம்.

Lumbergh-in-training said...

a small question:
Puthagam - book... pothagam - ?

just want to know if that's another tamil word for book..

thiru said...

//Blogger Lumbergh-in-training said...
a small question:
Puthagam - book... pothagam - ?

just want to know if that's another tamil word for book..

1/31/2009 07:32:00 PM//

நண்பருக்கு,

பொத்தகம் என்பது பழைய சொல். இன்னும் தமிழகத்தில் குமரிமாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கில் இருக்கிறது. பொத்தகம் பற்றிய விரிவான பதிவுகளை அய்யா இராம.கி அவர்களது வளவு வலைப்பதிவில் காணலாம். உங்களது ஆர்வம் பாராட்டுக்குரியது. சுட்டி இங்கே http://valavu.blogspot.com/2008/10/1.html

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com