நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் தருகிற மருந்தின் விளைவு, தரம் பற்றியும் அறியாமலே அதை பயன்படுத்துகிறோம். நோய் குணமடைவதற்கு பதிலாக புதிய பிரச்சனை உருவானால் எப்படி இருக்கும்? பல மருத்துவர்கள் கடைகளில் விற்பனைக்கு வராமல் சோதனை கட்டத்தில் இருக்கும் மருந்துகளை ஏழை நோயாளிகளிடம் கொடுத்து பயன்படுத்த சொல்வதுண்டு. இப்படி மருத்துவர் இலவசமாக தருகிற மருந்துகளை பெற்றுக்கொள்ளும் ஏழைகள் நன்றியுடன் பெறுவதுண்டு. தனக்கு தரப்பட்டுள்ள மருந்து சந்தையில் விற்பனை செய்ய உரிமம் பெற்றதல்ல, அதன் பக்கவிளைவுகள் பற்றிய சரியான கணிப்பு இல்லை என்பது ஏழை நோயாளிக்கு தெரிவதில்லை. தனது நோயை பயன்படுத்தி சோதனை ஒன்று நடைபெறுவதும் அவர்களுக்கு தெரிவதில்லை. ஏழ்மையை பயன்படுத்தி ஆய்வுகளை நடத்துவது மருத்துவர்கள் மட்டுமல்ல. மருத்துவர்களுக்கு பின்னால் விற்பனை பிரதிநிதிகள், மருந்து நிறுவனங்கள் என பெரிய கூட்டமே இயங்குகிறது. சிலவேளைகளில் மருத்துவருக்கே தான் செய்யும் செயலின் பின்விளைவுகள் பற்றி தெரிகிறதா என்பது சந்தேகமே. இந்த மருந்து சோதனையை (Clinical Trial) நிகழ்த்தும் மருந்து நிறுவனங்கள் தான் ஒழுக்கமற்ற நடைமுறைகளை கடைபிடிக்கும் முதல் குற்றவாளிகள்.
மருந்து பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் மருந்து சோதனை மிக முக்கியமானது. புதிதாக உருவாக்கப்படும் மருந்து மற்றும் கருவிகளின் செயலாற்றும் திறன் மற்றும் பயனை கணிப்பிட மருந்துவ ஆராய்ச்சி அவசியமாகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்படும் நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் கருவிகளை முதலில் விலங்கினங்கள் மீது சோதனை செய்து வெற்றியடைந்த பின்னர் மட்டுமே பல கட்டங்களாக மனித உடலில் செலுத்தி கட்டுப்பாடான சூழ்நிலையில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்பது பொது நடைமுறை. இந்த சோதனை முடிவுகள் அடிப்படையில் மருந்தின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான இறுதி வடிவமும், அனுமதியும் கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரே ஒரு மருந்து கடைகளில் விற்கப்படும். புதிய மருந்து சோதனைக்கு தங்களை பயன்படுத்த அனுமதிப்பவர்களுக்கு பணம் கிடைப்பதால் தானாகவே பலர் சேர்வதுண்டு. மருந்து சோதனைக்கு தன்னை ஈடுபடுத்த முன்வரும் நபர்களிடம், சோதனையின் தன்மை, பாதிப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிவித்த பின்னரே சம்மதம் பெறப்படவேண்டும் என்பது பொதுவான விதி. நடைமுறையில் இவை அனைத்தும் மீறப்படுகிறது.
பெரும்பாலும் சோதனைக்கு உட்படுபவர்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆய்வு நிறுவனங்களால் தரப்படுவது இல்லை. தன்னை சோதனைக்கு உட்படுத்த சம்மதிப்பவர்கள் பணம் கிடக்கும் ஆசையில் இருப்பதால், உடல்நலம் பற்றிய பாதிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளும் விழிப்புணர்வு குறைந்தே இருக்கிறார்கள். சோதனைக்கு உட்படும் நபர்களின் அறியாமையை பயன்படுத்தி சோதனையின் பக்கவிளைவுகளை பற்றி தெரிவிக்காமல் மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நிறைவேற்றுகின்றன. மருந்து சோதனையில் ஒளிவு மறைவற்ற தன்மையையோ, நேர்மையோ மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் கடைபிடிக்கவில்லை என்று பிரிட்டன், அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகளில் எதிர்ப்புகள் எழுகின்றன. புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்தால் கிடைக்கும் பண இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் இயங்குகின்றன. உலகமயமாக்கல் கொள்கையின் முதலாளித்துவ சித்தாந்தத்தில் இயங்கும் காப்புரிமை, போட்டி, இலாப நோக்கு மட்டுமே மருந்து நிறுவனங்களின் நோக்கமாக அமைந்துவிட்டதால் பக்கவிளைவுகளைப் பற்றி கவலைப்படாது நேர்மையற்ற வழிகளில் ஆய்வுகளை மேற்கொள்கின்றன.
பிரிட்டனில் மருந்து சோதனையால் பாதிப்படைந்த அதிர்ச்சிகரமான ஒளிப்பதிவு ஒன்று இங்கே (நேரம் இருப்பின் அவசியம் பார்க்க வேண்டியது):
மிகவும் அபாயமான, கவலைதரத்தக்க ஒரு நிகழ்வை மிக அற்புதமாகப் படம்[!!] பிடித்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி, நண்பரே!
நான் இந்தியாவில் இருக்கும்காலை மிகவும் விசனித்த ஒன்று இது.
இதைத் தவிர, போலி மருந்து, தரம் குறைந்த மருந்துக் கம்பெனிகளை ஊக்குவிக்கும், ஒரு சில பச்சை நோட்டுகளுக்காக தரமிழக்கும், ஒரு சிங்கை சுற்றுப்பயண சீட்டுக்காக விலை போகும், மருத்துவர்களைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.
தரக்கட்டுப்பாடு, முறையான சோதனை என்பதெல்லாம் நிலை நிறுத்தப்படாததால் வரும் கேடுகள் இவை.
தாயகத்தில் இருக்கும் மனித உரிமைக் கழகம் முதல் வேலையக எடுத்துக் கொண்டு செயல் பட வேண்டிய ஒரு முக்கியமன வேலை இது.
எதனை இழக்கிறோம் என்பதரியாமலேயே தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்காக உடனே ஆற்றிட வேண்டிய செயல் இது!
செய்வார்களா?
ஊடகங்கள் ஏன் இதைக் கண்டுகொள்வதே இல்லை!
அப்பாவி மக்களைப் பற்றி என்று கவலைப்பட்டிருக்கின்றன இவைகள்!
தரமான, தேவைய்யன விழிப்புணர்வுப் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
வேலையாக
முக்கியமான
என்பதறியாமலேயே
தேவையான
அவசரத்தில் [ஆத்திரத்தில்??] எழுதியதால் ஏற்பட்ட எ.பி. களுக்கு வருந்துகிறேன்.
திரு
மிகவும் தேவையான பதிவு!
உண்மையில் இதைப் பற்றி ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்ளவேண்டிய விசயம். நன்றாக தொகுத்துள்ளீர்கள்.
நன்றி
'ஈ' படத்தை (கதை மட்டும்) பார்க்கும் பொழுதே, 'அட கொடுமையே !' என்றிருந்தது.
உங்களின் இந்த பதிவு உண்மையான பீதியை கிளப்புகிறது. அருமையான பதிவு!
'மருத்து சோதனை' என்ற பெயரில் இந்திய ஏழைகளின் உயிரை பணயம் வைக்கும் விளையாட்டு...
'சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ)' என்ற பெயரில் இந்திய ஏழை மக்களின் நிலம் பறிமுதல்...
வல்லரசு நாடுகள் 'மின்னனு குப்பைகளை' இந்தியாவில் உள்ள கடலில்தான் கொட்டுகிறார்கள்...
ஒரு புறம், விவசாயிகள் தற்கொலை..
இதற்கும் மேலாக... லஞ்சம், சாதி/மத சண்டைகள்...
இவற்றில் எதை நினைத்து.. எந்த தலைவரை நம்பி ... எதற்காகதான் நம் மக்கள் போராடுவது...?
மிகவும் கவலையளிக்கிறது.
/நோய்க்கு என்ன மருந்து தரப்படுகிறது, அதன் அவசியம் என்ன? என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்? இந்த மருந்தின் தரமென்ன?/
இதலாம் கேட்க வேண்டும் என்பதுதான் கல்வியறிவு இல்லாத நம் மக்களுக்குதான் தெரியுமா?
அப்படியே கேட்டால்தான் நம் மருத்துவர்கள் நோயளிகளை மதித்து விளக்கம் அளிப்பார்களா என்ன?
இரண்டு நாட்களுக்கு முன்புதான்..
'இந்தியாவில் 20% மருந்துகள் போலியானவை' என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
இதற்கெல்லாம், "மருத்துவ அய்யா"வின் புதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறாரோ?
செய்திக்கு நன்றி, திரு!
அதிர்ச்சியான தகவல்களை தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். எல்லோரும் வாசிக்க வேண்டிய கட்டுரைதான்.நன்றி திரு.
அருமையான கட்டுரை திடு அவர்களே
இதே Pfizer நிறுவனம் 2006 டிசெம்பரில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மருந்திற்கான சோதனையை நிறுத்திகொள்வதாக அறிவித்துள்ளது. இப்போது அறிவித்தாலும் இந்த சோதனைகளில் தங்கள் உயிரை இழந்தவர்கள் எத்தனையோ பேர்.
இந்தியாவில் தான் இது போல சோதனைகள் அதிகம் நடக்கிறது என்பது உண்மை தான். இங்கு நோயாளிகள் அதிகம் இருப்பது ஒரு காரணம்.
தற்போது 226 இது போல சோதனைகள்
இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறதாம்.
அருமையான பதிவு திரு. இப்போதுதான் பூங்காவிலிருந்து வந்து படித்தேன். ஒவ்வொரு இடுகைக்கும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆர்வமும், உழைப்பும் என்னை எப்போதும் வியக்கவைப்பவை. தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி. நன்றி.
இது குறித்து புதிய ஜனநாயகத்திலும் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்தியாவை எல்லா வகையிலும் அவனது குப்பை கிடங்காக, உற்பத்தி பின் நிலமாக, சந்தையாக பயனபடுத்தும் அவனது திட்டத்தை உண்ராமல் நாடு முன்னேறுது நாடு முன்னேறுது என்றூ கூப்பாடு போடும் கூட்டாத்தார் இது போன்ற விசயங்களை விவாதிக்கும் போது காரியார்த்தமான மௌனம் சாதித்து தமது நேர்மையை பறை சாற்றுகிறார்கள்.
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2006/march/mar_2006_14u.html
அசுர்ன்
மிகவும் தரமான பதிவு...வெகுஜன ஊடகங்கள் மூலமாக மக்களை சென்றடைய வேண்டிய கருத்துக்களை எடுத்து வைத்துள்ளீர்கள்...
இந்தியாவை குப்பைமேடாக்க முயலும் இது போன்ற பன்னாட்டு மருந்து நிறுவனங்களை கூண்டில் அடைக்கவேண்டும்...( டாக்டர் ரெட்டீஸ் லேப் போன்ற நிறுவனங்களும் இதற்க்கு உடந்தையாம் அய்யா)
அற்புதமான பதிவு திரு. பூங்காவில் இப்போதுதான் இந்த பதிவை படித்தேன்.
ஏழை மக்களின் உயிரை துட்சமாக நினைப்பவர்களுக்கும், ஏமார்ந்த பெண்களின் கருப்பைக்குள்ளே சென்று விட்ட மருத்துவ துரோகிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.
இதனை பிட்-நோட்டீஸ் போல் எடுத்து விநியோகித்தால் பலன் பெறக் கூடியவர்கள் நிறையப் பேர்.
மருந்து தயாரிப்பாளர்களின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டும்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியமே. உள் நாட்டில் அரசு சரியான முறையில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அளித்தால் இந்த மாதிரியான கேடுகள் நடக்க வாய்ப்பு இருக்காது. மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு மருத்துவராகி, அதே மக்களுக்கு எமனாக வரும் ஈனப்பிறவிகள் இருக்கும் வரை இது தொடரும்தான். மருத்துவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கண்கானிக்க அரசு நடவடிக்கை எடுத்தலும் வேணடும்.
நிற்க,
அமெரிக்கர்கள் முதன் முதலாக அணுகுண்டு வெடித்து சோதனை செய்த போது, தங்களது சொந்த இராணுவ வீரர்களையே சோதனை களமாக ( cobays) உபயோகித்தது. அணுக்கதிர்களாள் தாக்கப்பட்ட வீரர்களுக்கு இதைப்பற்றி எதுவும் சோதனைக்கு முன்பும் பின்னும் தெரிவிக்கப் படவில்லை. இதை விட பெரிய பாவம் என்னவென்றால், கதிர் வீச்சுக்கு இரையான இவ்வீரர்களை நீண்ட காலங்களாக மருத்துவர்கள் சோதித்து கதிர் வீச்சு மனிதன் மீது ஏற்படுத்தும் அழிவுகளை ஆராய்ந்து வந்தனர். இவை பற்றி எதுவும் வீரர்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது. தன் சொந்த மக்களையே ஊதாசீனப்படுத்தும் அமெரிக்கா, பாதுகாப்பற்ற ஏழை மக்கள் மீதா பாசத்தை கொட்டப் போகிறது?
நாம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
நம் இந்திய சமுதாய கட்டமைப்பில் நாமே நம்மை தாழ்த்தி உதாசீனப் படுத்தியது ஏனைய நயவஞ்சக நரிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதம் ஆகிவிட்டது.
விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.
மிக மிக அவசியமான பொதுமக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டிய பதிவு. நன்றிகள் பல.
மிகவும் அவசியமான ஒரு பதிவு! தொகுத்தமைக்கு நன்றிகள்.
கொள்ளையடிக்கும் மருந்து கம்பெனிகளின் தாயகமான அமெரிக்காவில், மாதத்திற்கு ஒரு மருந்து விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுகிறது. இன்று நன்றாக இருக்கும் என்று சான்றளிக்கும் மருந்து, சில பல பேர் உயிரை விட்ட பிறகு, அது நொட்டை இது நொள்ளையென்று, சாவகாசமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. அடுத்த வாரமே புதிதாக ஒன்று அறிமுகப் படுத்தப்படுகிறது.
இவ்வளவு சீக்கிரம் மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும், விற்பனைக்குக் கொண்டுவருவதற்கும் ஒரு சோதனைக் கூடம் தேவை. மருந்துகள் மற்றும் நோய்கள் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாத இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் இலக்கு.
மருந்துச் சோதனைகள் மீது கட்டுப்பாடுகள், மக்கள் விழிப்புணர்வு மிக அவசியம். ஆனால், நமது அரசாங்கம் விழித்தெழ மருந்து கண்டுபிடிப்பது யார்? எப்போது??
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com