Wednesday, February 28, 2007

மனு சாத்திரம் ஓர் அறிமுகம்

திண்ணையில் மலர்மன்னன் பார்ப்பனீய பார்வையில் மனுசாத்திரத்தை பற்றி எழுதிய கட்டுரையை ஜடாயு என்கிற பதிவர் ஒரு பதிவு செய்திருந்தார். ஆறாம்திணையில் மனுசாத்திரம் பற்றி திரு. ஆ. சிவசுப்பிரமணியன் "மனு சாஸ்திரம் ஓர் அறிமுகம்" என எழுதிய கட்டுரையில் மலர்மன்னனுக்கு பதில் இருக்கிறது என்பதால் எந்த மாற்றமும் செய்யாமல் அந்த கட்டுரையை பதிவு செய்கிறேன். நல்ல ஒரு கட்டுரையை எழுதிய திரு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும், ஆறாம்திணைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

-000-

காலத்தால் முந்திய வடமொழி நூல்களாக வேதங்கள் அமைந்திருக்கின்றன. வேதங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவான நீதி நூல்கள் 'ஸ்மிருதிகள்' என்றழைக்கப்படுகின்றன. இவை முனிவர்களால் கூறப்பட்டவை என நம்புகிறார்கள்.

தர்ம சாத்திரங்கள்
நித்திய கருமங்கள்
ஆசாரம்
விவகாரம்
பிராயச்சித்தம்
இராச தர்மம்
வருணாசிரமம்
அக்நி கார்யம்
விரதம்

ஆகியன தொடர்பான விதிமுறைகளை இவை குறிப்பிடுகின்றன. ஸ்மிருதிகள் மொத்தம் பதினெட்டாகும். (19 என்ற கருத்தும் உண்டு) இவற்றுள் மிகப் பரவலாக அறிமுகமாகி இன்றளவும் பேசப்படுவது 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற மனுஸ்மிருதி ஆகும்.

மனுஸ்மிருதி

இந்த நூலானது இதை இயற்றியவரின் பெயராலேயே பெயர் பெற்றுள்ளது. மனு என்ற பெயரில் ஏழு பேர் இருந்தனர் என்றும் ஏழாவது மனுவே இந்நூலை இயற்றியவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் மனு என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்லவென்றும் நீதிநெறிகளை வகுக்கும் பதவியின் பெயரென்றும் சிலர் கூறுவர்.

ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட 'மாணவ தர்ம சாஸ்திரம்' என்ற நூல் வாய்மொழியாக வழங்கி வந்துள்ளது.

அந்நூலை மூல நூலாகக் கொண்டு மனுதர்ம சாஸ்திரம் உருவாகியுள்ளது. 12 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்ட இந் நூலில் 2684 சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன.

நூல் நுவலும் செய்தி

வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள், மன்னன் ஆட்சி புரிய வேண்டிய முறையும், தண்டனையும், வழங்க வேண்டிய முறையும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆண் பெண்களிடையே நிலவும் சமூக உறவுகள், கணவன் மனைவியர் ஒழுக்க நியதி, பிறப்பு இறப்புச் சடங்குகள், குற்றங்களும் அவற்றிற்கான கழுவாய்களும், மறுபிறவி போன்றவை அந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் பின்வரும் ஐந்து கருத்துக்களை அழுத்தமாக வலியுறுத்துகின்றது.

1. நால் வருணப்படி நிலை
2. இதில் பிராமணிய மேலாண்மையும், கீழ் வருணங்களின் −ழிநிலையும்
3. உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்.
4. நால் வருணத்திற்கு வெளியில் உள்ள சண்டாளர்கள் என்ற பிரிவினர் பின்பற்ற வேண்டிய கொடூரமான கட்டுப்பாடுகள்.
5. பெண்ணடிமை

நூலின் காலம்

இந் நூலானது கி.மு. 170 க்கும் 150 க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், மெளரியர்களின் புத்த மத அரசுக்கு எதிரான பிராமணப் புரட்சியின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் பிராமணியச் சட்டத் தொகுப்பாகவே இது வெளிவந்துள்ளது என்றும் அம்பேத்கர் (1995:165-166) கூறுகிறார்.

நூல் உருவான வரலாறு
சுவாயம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று ''ஞான நிறைவும், வல்லமையும், செல்வமும், வீறும், திறலும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே, நால்வருணந்தரும் மற்றோரும் கடைபிடிக்கத்தக்க அவரவர் செயல்கள், கடமைகளை எமக்கு உணர்த்துவீராக! என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் உயிர்களின் தோற்றம் குறித்தும் கூறி விட்டு (சூத்திரம் 5 முதல் 56 முடிய) பின் ''எனது குமாரரான பிருகு இந்தத் தர்ம சாத்திரத்தைச் சற்றும் பிறழாமல் உங்கட்கு உபதேசிக்கக் கடவர். ஏனெனில் முறையாக என்னிடம் பிருகு முனிவரே இதனைப் பயின்று கைவரப் பெற்றவராகிறார்'' என்று கூற, பிருகு முனிவர் முனிவர்களை நோக்கிக் கூறிய செய்திகளே மநு தர்ம சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

இக் கருத்தை அம்பேத்கர் (1995 : 165-166) ஏற்றுக் கொள்ளவில்லை.

''மனு என்ற பெயருக்கு இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றில் பெரும் மதிப்பு இருந்தது. சட்டத் தொகுப்புக்கு இந்த மதிப்பின் மூலம் பெருமை சேர்க்கும் நோக்கத்துடனேயே அதை மனு வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. சட்டத் தொகுப்பில் அதை இயற்றுபவரின் பெயரைக் குறிப்பிடும் இடத்தில் பண்டைக்கால வழக்கப்படி பிருகு என்ற குடும்பப் பெயர் கூறப்பட்டுள்ளது. 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற தலைப்பில் பிருகு இயற்றிய நூல்'' என்பதே அதன் உண்மையான தலைப்பு ஆகும். தொகுப்பின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பிருகு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமக்கு அதை இயற்றியவரின் குடும்பப் பெயர் தெரிகிறது. அவருடைய சொந்தப் பெயர் நூலில் தெரிவிக்கப்படவில்லை. நாரத ஸ்மிருதியை எழுதியவருக்கு மனு ஸ்மிருதியை இயற்றியவரின் பெயர் தெரிந்திருந்தது. அவர் அந்த இரகசியத்தை வெளியிடுகிறார். மனு சாஸ்திரத்தை இயற்றியவர் சுமதி பார்கவா என்பது கட்டுக்கதைகளில் வரும் பெயர் அல்ல. அவர் வரலாற்றில் இடம்பெற்ற ஒருவராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் மனுவின் சட்டத் தொகுப்புக்கு உரை எழுதிய மேதாதிநே கூட இந்த மனு ஒரு குறிப்பிட்ட நபர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். எனவே மனு என்பது மனுஸ்மிருதியின் உண்மையான ஆசிரியரான சுமதி பார்கவாவின் புனை பெயராகும். இந்நூல் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதைப் பின்வரும் சூத்திரங்களால் அறியலாம்.

தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும் தொன்று தொட்டு வந்த ஒழுக்க மரபும் கவலையற்ற மன நிறைவுமாகும். (2 : 6)

மனுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில் அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி. (2 : 7)

வேத சத்யத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான். (2 : 8)

சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படா நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும் மறுமையில் சுத்தமான சுகத்தையும் பெறுவான். (2 : 9)

வேதமே சுருதியென்றும் அறத்துணிபுகளே ஸ்மிருதியென்றும் உணர்க.... (2 : 10)

மனு தர்ம சாஸ்திரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற செய்தியும் பிரம்மன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோரால் இது கூறப்பட்டது என்ற செய்தியும் மனுதர்ம சாஸ்திரம் புனிதமானது, உயர்வானது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை நிலை நாட்ட உதவுகிறது. இனி மனு தர்ம சாஸ்திரத்தின் சுலோகங்கள் சிலவற்றைக் காணலாம்.

பிராமணர் உயர்வு

''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).

இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இறைவனுடைய முகத்தில் பிராமணர் தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் சுலோகங்களில் வலியுறுத்துகிறார்.

''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).

மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).


இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (2:31, 32) என்றும் பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும் (2 : 176-178) வலியுறுத்துகிறார். தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).


சத்திரியர் - வைசியர் - சூத்திரர் நிலை
இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு, சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.

''பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் புரிவது வேத பாராயணம் செய்விப்பது, விடிய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும். (1 : 89)

வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90)

ஏவலான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார் (1 : 91).

நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார்.

''நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (4 : 61).

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22).

அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது.

வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417)

...... இழி பிறப்பாளர் பெருகி வரும் நாடு விரைவில் குடிமக்களுடன் அழியும் (10 : 61).

பிராமணனின்றி சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக் கடவர் (9 : 322).

வருணமற்றவர்
நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார்.

தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49)

இவர்கள் வாழும் இடமாக ''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்'' (10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

சண்டாளர்களின் இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார்.

''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52)

''இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52).

''நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்'' (10 : 53).

''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).

''அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்'' (10 : 55).

''மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்'' (10 : 56).

இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார்.

''அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62).

பெண்கள்
அடுத்து பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.

''எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது'' (10 : 147)

''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148).

''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154).

''அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).

''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15).

இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).

மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).

மனு தர்ம எதிர்ப்பு
இத்தகைய அதர்ம சாஸ்திரத்திற்கு எதிரான கருத்துக்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சித்தர்களும், வடபுலத்தில் தாந்திரிகர்களும் மனுதர்மத்தின் நால்வருணக் கோட்பாடுகளுக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். மனு - மனு தர்மம் என்ற சொற்களைப் பயன்படுத்தாவிட்டாலும் இந் நூலின் வருணக்கோட்பாடுகளுக்கு மாறான கருத்துக்களை முன்மொழிந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் மஹத் என்னும் நகரில் நடந்த தலித்துகள் மாநாட்டில் 1927 டிசம்பர் 25 - ஆம் நாள் மனு தர்ம சாஸ்திரத்தை எரிக்கும் பின்வரும் தீர்மானம் நிறைவேறியது. (அம்பேத்கர் 1997 : 197, 198)

''இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத்தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனு ஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது''.

இதன்படி இரவு ஒன்பது மணிக்கு மாநாடு நடக்கும் இடத்தில் பலிபீடம் போல் அமைக்கப்பட்டு மனு நீதி நூல் அதன் மேல் வைக்கப்பட்டது. தீண்டத்தகாத சாதிச்சாமியார்கள் சிலர் முறைப்படி அதற்கு நெருப்பு மூட்டித் தகனம் செய்தனர். மனுநூலின் தகனம் முடிந்த பின் அம்பேத்கர் எழுந்து ''ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி இனி பாரதத்தில் செல்லாது என உலகம் தெரிந்து கொள்ளட்டும்'' என்று முழங்கினார். (வசந்த்தின் 1995:56)

இந் நிகழ்ச்சி குறித்து அம்பேத்கர் பின்வருமாறு எழுதினார்:
''இந்து சமூக அமைப்பு என்னும் கட்டுமானம், மனு ஸ்மிருதி என்ற அடித்தளத்தின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த மனுஸ்மிருதி இந்து சமய நூல்களின் ஒரு பகுதி. எனவே அது எல்லா இந்துக்களுக்கும் புனிதமாக உள்ளது. புனிதமானது என்பதால் பிழைபாடற்றதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்துவும் அதன் புனிதத்தில் நம்பிக்கை வைக்கிறான். அதன் ஆவணங்களை ஏற்று நடக்கிறான். மனு, சாதியையும் தீண்டாமையையும் ஆதரித்து நிற்பதோடு அதற்குச் சட்ட வலுவையும் தருகிறார். எனவே, ஒரு அபகீர்த்தி வாய்ந்த மனுஸ்மிருதியை எதிர்த்தது ஒரு துணிகரமான செயலாகும். இந்து சமயம் என்ற கொத்தளத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். பிரான்சில், பாஸ்டில் சிறை எவ்வாறு கொடுங்கோன்மையின் உருவகமாக இருந்ததோ அவ்வாறே இந்து வாழ்க்கை முறைக்கும் சிந்தனைப்போக்குக்கும் அடிநாதமாக இருந்த ஏற்றத்தாழ்வுகளின் உருவகமாக இருந்தது மனுஸ்மிருதி. பாஸ்டிலின் வீழ்ச்சி பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பரந்த மக்கள் பகுதியினரின் விடுதலையையும் வெற்றியையும் எவ்விதம் குறித்ததோ அவ்விதமே 1927 ஆம் ஆண்டு மஸத்தில், மனுஸ்மிருதி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி தீண்டப்படாத மக்களின் விடுதலை வராற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகத் திகழ்ந்தது.''

மனு தர்மத்தின் மீது இத்தகைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு முக்கியக் காரணம் என்ன? என்பதை அப்பேத்காரே (1997-232) குறிப்பிடுகிறார்.

''சதுர்வருணமாக சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது மனுவுக்கும் பிரதானமானதாக இருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில், அது அவருக்கு இரண்டாம்பட்சமானதாகவே இருந்தது. சதுர் வருணத்திற்குள் இருப்போரிடையேயான ஓர் ஏற்பாடாகவே இதனை அவர் கருதினார். ஒருவன் பிராமணனா, சத்திரியனா, வைசியனா அல்லது சூத்திரனா என்பது பலருக்கு முக்கியமானதல்ல. இது அவருக்கு முன்பே இருந்து வருகின்ற ஒரு பிரிவினை. −ந்தப் பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தி அதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். இந்தப் பிரிவினை அவரிடமிருந்து தோன்றியதல்ல. மாறாக மனுவிடமிருந்து ஒரு புதிய பிரிவினை தோன்றியது.

1. சதுர் வருண அமைப்புக்குள் இருப்பவர்கள்.
2. சதுர் வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள்

என்பதே இந்தப் பிரிவினை. இந்தப் புதிய சமூகப் பிரிவினை மனுவிடமிருந்து உதித்ததாகும். இந்துக்களின் பண்டைத் தர்மத்துக்கு அவரது புதிய சேர்ப்பு இது. இந்தப் பிரிவினை அவருக்கு அடிப்படையானதாக, மூலாதாரமானதாக, இன்றியமையாததாக இருந்தது. ஏனென்றால் அவர்தான் இந்தப் பிரிவினையை முதலில் உருவாக்கியவர். அதற்குத் தனது அதிகார முத்திரை அளித்து அதனை அங்கீகரித்தவர்!

இக் கூற்றின் உண்மைத் தன்மையை இதுவரை நாம் பார்த்த மனு தர்ம சூத்திரங்கள் உணர்த்துகின்றன.

மனு தர்ம ஆதரவாளர்கள்
ஆனால் இன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர்.

''1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான 'ஆர்கனைசர்' (மே 10, 1992) வெளியிட்டுள்ளது''. (மார்க்ஸ்).

இந்து தர்மாச்சாரியார்களும் மத அடிப்படைவாத இயக்கங்களும் மனுவைப் புறக்கணிக்க விரும்பியதில்லை. விசுவ இந்து பரிஷத் 1982 −ல் நிகழ்த்திய ஊர்வலத்தில் மனு தர்ம சாஸ்திரத்தின் ஒரு பிரதி எடுத்துச் செல்லப்பட்டது. (அஸ்கர் அலி இன்ஜினியர்) இவற்றுக்கெல்லாம் காரணம் இந்து மதத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட சாதிய அமைப்புதான். திலிப்போஸ் (1984 : 146) கூறுவது போல ''சர்ச் இல்லாமல் கிறிஸ்துவ மதம் இல்லை. அதுபோல் சாதி அமைப்பு இல்லாமல் இந்துமதம் இல்லை.'' இந்தச் சாதிய அமைப்பை நிலை நிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்தை ஓர் உண்மையான இந்துவால் புறக்கணிக்க முடியாது. எனவே சமூக நீதியை இவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நிலை நாட்டவும் முடியாது. இந்துக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று மக்கள் என்று உரக்கப் பேசி வருபவர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்!

ஏனைய சமயங்களைப் போன்றே கத்தோலிக்கத் திருச்சபையும் பல்வேறு தவறுகள் மற்றும் பிழைகளைச் செய்துள்ளது. விவிலியக் கருத்துடன் முரண்படும் அறிவியல் கருத்துக்களைக் கூறியமைக்காகக் கலிலியோவைச் சிறையிலடைத்தது. புரூனோவை உயிருடன் கொளுத்தியது. இசுலாமியர்களுக்கு எதிராகச் சிலுவை யுத்தம் என்ற பெயரில் நீண்ட கால யுத்தத்தை நடத்தியது. பாசிஸ்ட் முசோலினியை ஆதரித்தது. ஆனால் இன்றைய போப் இச் செயல்கள் எல்லாம் தவறு என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டதுடன் கடந்தகால வரலாற்றுப் பிழைகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து சங்கராச்சாரியார்களும் ஏனைய துறவிகளும் காசியிலோ, மதுராவிலோ கூடி, 'மனுவின் வருணக் கோட்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளுகிறோம். சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் மனுநீதி எதிரானது என்பதை உணருகிறோம்' என்று வெளிப்படையாக அறிவியுங்களேன்!

=====

இக்கட்டுரையை ஆறாம்திணையில் படிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

8 பின்னூட்டங்கள்:

சிவபாலன் said...

திரு

இந்த கட்டுரையை இன்னும் முழுமையாக படிக்கவில்லை.. படித்துவிட்டு வ்ருகிறேன்.

எனினும் பதிவுக்கு நன்றி

ஜடாயு said...

திரு,

மனுஸ்மிருதியின் மொழிபெயர்ப்புகள் பலரும் அறிந்தவை தான். ஆனால் கடைசி பத்தியில் இந்துத்துவ நிலைப்பாடு பற்றிக் கூறுவது தவறு.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்-இன் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. ரமேஷ் பதங்கே அவர்கள் (தலித் உரிமைகளுக்காக மிகப் பெரிய அளவில் போராடியவர் இவர்) ஒரு நூலை எழுதியிருக்கிறார் - "சங்கமும், மனுவும், நானும்" (மராத்தியில் "சங், மனு ஆணி மீ"). இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையத்திலேயே உள்ளது -
http://hvk.org/specialrepo/mms/index.html

புராண கால மனுவை ஆதிபுருஷர் என்பதாக எல்லா இந்துக்களும் போற்றுகின்றனர். விஷ்ணுவின் மச்சாவதாரத்தில் பிரளயத்தில் இருந்து தப்பிய உலகம் மறுபடியும் உயிர்க்கும் தொன்மத்துடன் தொடர்புடையவர் இவர். மனிதன், மானிடன், மனுஷ்யன் என்ற பெயர்கள் எல்லாமே மனு என்பதில் இருந்து வருகின்றன. ('ஆத்மி' என்ற மனிதனைக் குறிக்கும் அரபிச் சொல் ஆதாமில் இருந்து வருவது போல) இமாசலப் பிரதேசத்தில் கோயில் கட்டப் பட்டது இந்த மனுவிற்குத் தான்.

இந்தக் கட்டுரையே குறிப்பிடுவது போல ஸ்மிருதியைச் செய்தவர் பெயரும், இந்தப் புராண புருஷரின் பெயரும் கலந்தது ஒருவிதான குழப்படி தான். மோசடி என்று சொல்லலாமா? அதை வரலாற்று ஆய்வாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

மற்றபடி, தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கூட மனு பற்றிய குறிப்பு உள்ளது (திருவள்ளுவ மாலை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம்...). வள்ளலார் "மனுமுறை கண்ட வாசகம்" என்ற பெயரில் தர்மசிந்தனைகளை விளக்கும் ஒரு நூலையே எழுதியிருக்கிறார். இங்கும் இரு மனுக்களும் ஒன்று என்பது போன்ற புரிதலே கிடைக்கிறது.

இந்த குழப்படியை எல்லாம் விட்டு மனுஸ்மிருதியை ஒரு நூல் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் அதில் காலத்துக்கு ஒவ்வாத இத்தகைய கருத்துக்களோடு பல நல்ல அறக் கருத்துக்களை விளக்கும் சுலோகங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நோக்கில் தான் நான் மனுஸ்மிருதியைப் பார்க்கிறேனே அன்றி புனித நூல் என்பதாக அல்ல.

ஜடாயு said...

மனுஸ்மிருதி பற்றிய இந்துத்துவ நிலைப்பாடு பற்றி இன்னும் -

சங்கத்தின் மூன்றாவது தலைவர் பாலாசாகேப் தேவரஸ் கருத்து -
http://www.hvk.org/specialarts/sehc/sehc.html

தாத்தாவின் கிணற்றில் வரும் உப்புத்தண்ணீர் பற்றி நான் குறிப்பிட்ட சுலோகம் இங்கே படித்தது தான் :))

Anonymous said...

மனு நூல் எப்பொழுது எழுதினார்கள் என்பதற்கே சரியான ஆதாரம்
கிடையாதாம். ஆனால் பெண்கள் வேத காலத்தில் பல உரிமைகள்
பெற்றிருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்காம். இது போல
காமெடி கட்டுரைகளை மலர்மன்னரால் மட்டுமே எழுத முடியும்.
வேலிக்கு ஓணானும், ஓணானுக்கு வேலியும்தான் சாட்சி.

இவருடைய அடுத்த கட்டுரையில் அக்ரஹாரத்தில் பார்ப்பனரும்,
தாழ்த்தப்பட்டவர்களும் ஒரே இலையில் சோறுண்டார்கள் என்று
எழுதுவார்.

Suresh K said...

Very good article

thiru said...

உங்கள் பாராட்டுக்கள் கட்டுரையை எழுதிய திரு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு உரியது.

ஆதவன் தீட்சண்யா said...

நண்பருக்கு,
ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் இக்கட்டுரை புதுவிசை காலாண்டிதழின் 5 வது இதழில் வெளியாகி பின் ஆறாம்திணையில் பதிவேற்றப்பட்டது. விவாததிற்கு பயன்படுவது மகிழ்ச்சியே.
-ஆதவன் தீட்சண்யா, ( புதுவிசைக்காக)

thiru said...

ஆதவன்,

ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கட்டுரை பற்றிய தகவலுக்கு நன்றி.

-யோ.திருவள்ளுவர்

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com