Wednesday, January 17, 2007

நான் அறிந்த மதம்

மாதவி டீச்சர் நல்லொழுக்க பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

வெளியே திடீரென கும்பலாக சத்தம்.

"ஜெய்காளி! ஓம் காளி!"
"உயிரோட விடமாட்டோம்!"
"இந்து ஒற்றுமை ஓங்குக! கிறிஸ்தவர்கள் ஒழிக!"
"இந்து முன்னணி வாழ்க!"
"இந்தியா இந்துக்களுக்கே"
".........."
".........."
".........."

கும்பலாக பல குரல்கள் தொடர்ந்தன.

பள்ளிக்கூட ஓட்டுக்கூரை மீது கற்கள் விழுந்து ஓடுகளை உடைத்து உள்ளே விழுந்தது. தொடர்ந்து கல்லெறியும், கூக்குரலும், கெட்டவார்த்தைகளுமாக கலவர சத்தம்.

இரையை தேடும் கழுகை பார்த்து பதுங்குவது போல மேசைகளுக்கு அடியில் நாங்கள்.

பருந்தின் கொடிய தாக்குதலிலிருந்து காக்க போராடும் தாய்க்கோழி போல எங்களை பாதுகாக்க துடித்தார் மாதவி டீச்சர்.

வெளியே எல்லோரும் ஓடுவது காலடி சத்தங்களில் கேட்டது. ஏதோ வண்டியின் சத்தமும் அதிலிருந்து துரத்தும் குரல்களும் கேட்டது.

தொடர்ந்து மயான அமைதி!

மெதுவாக தாயின் இறகையிலிருந்து வரும் குஞ்சுகள் போல மேசைக்கடியிலிருந்து எட்டிப்பார்த்து வெளியே வந்த எங்களில் சிலரின் தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

எப்போதுமே கண்டிப்பாக இருந்த டீச்சரின் குரல்கள் உடைந்து கண்ணீர் விட்டு அழுதார். அவசரமாக முதலுதவி, மருத்துவம் என பரபரத்தது பள்ளி. சிலமணி நேரங்களுக்கு பின்னர் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. வெளியே பதட்டத்துடன் பெற்றோர் காத்திருந்தனர். என்னையும், சகோதரியையும் அழைக்க அப்பாவின் பழைய சைக்கிளின் வந்திருந்தார்.

எதற்கு திடீரென இந்த குரல்கள்? எதற்கு விடுமுறை? எதுவும் தெரியாது. அப்பாவை கண்டதும் விடுமுறையை நினைத்து சந்தோசாமா, சத்தங்களையும், கல்லெறியையும் அனுபவித்த அச்சமா தெரியவில்லை. அப்பாவை கட்டிக்கொண்டு அழுகை மட்டும் வந்தது. பாதுகாப்பான ஒரு வித உணர்வும் கூடவே ஒட்டிக்கொண்டது.

வீட்டில் அம்மாவும், அப்பாவும் அக்கம் பக்கத்து சொந்தங்களிடம் பேசியதில் மண்டைக்காட்டில் கலவரம் என தெரிந்தது. கலவரம்னா என்னன்னு அதற்கு முன் வரை தெரியலை. மண்டைக்காடு திருவிழாவின் போது தாத்தா வாங்கி வரும் மிட்டாய், கரும்பு, உருட்டு வண்டி நினைவில் வந்து சிரிப்பூட்டியது. பள்ளியில் கேட்ட குரல்களும், கற்களுமாக அச்சத்தை கொண்டுவந்தது.

அம்மாவின் மடியில் தலை வைத்து அசதியாக உறங்கிப் போனேன்!

°°°°°

மறுநாள் அப்பா வேலைக்கு போகாமால் பள்ளிவரை வந்து பாதுகாப்பாக விட்டு சென்றார்.

பள்ளியில் மணியடித்து ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் பெயரை படிக்க துவங்கினார்.

"ஓங்குக கிறிஸ்தவ ஒற்றுமை!" தூரத்தில் குரல்கள்.
"கைது செய் கைது செய்........"
"இந்து முன்னணி ஒழிக!"
".........."
".........."
".........."

தொடர்ந்தன குரல்கள்.

மீண்டும் மேசைக்கடியில் நாங்கள். என்னருகில் இருந்த நண்பன் பலகிருஸ்ணன் நாயரும் நானும் நேற்று போல இன்றும் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டோம்.

தாய்கோழியாக இந்த முறை கணக்கு வாத்தியார் கிறிஸ்டோபர். துரத்தல்களும் குரல்களும் தொடர்ந்தன. மீண்டும் அமைதி!

இந்த முறை பள்ளியில் போலீஸ் வந்தது. தலைமை ஆசிரியர் சில மணிநேரங்களில் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை என அறிவித்தார்.

நேற்று போலவே அப்பா பள்ளியின் வாசலில் சைக்கிளுடன். அப்பாவை கட்டிப்பிடித்து மீண்டும் அழுகையும், பாதுகாப்பு உணர்வும் ஒட்டிக்கொண்டது.

வீட்டில் அப்பா, அம்மா பேசியதிலிருந்து பலர் கொல்லப்பட்டது, துப்பக்கிச்சூடு, கோவில்களும், தேவாலயங்களும் உடைக்கப்பட்டது. கன்னியாகுமரியெங்கும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பல காதில் விழுந்தது. வெள்ளை நிற போலீஸ் வண்டிகளின் நடமாட்டமும், ஒலிபெருக்கியில் தடை பற்றிய அறிவிப்புகளும் தொடர்ந்தன. ரோட்டில் பல இடங்களில் கல், மரங்களால் தடைகள் என பல நடந்தன. பஸ் எதுவும் ஓடவில்லை. ஊரே பதட்டமாக இருந்தது.

இந்து, கிறிஸ்தவம்,இஸ்லாம் என எந்த மதம் பற்றியும் அறியாத எனக்கு முதல் முறையாக மதங்களின் அறிமுகம் கிடைத்தது.

இவர்களில் நான் யார்? நான் இந்துவா? கிறிஸ்தவனா? எந்த மதம்?

எதுவுமறியாத பிஞ்சுமனம் கனமானது.

°°°°°°

இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை எந்த கடவுளையும் அறிந்ததில்லை. கடவுளை நினைத்து கவலைப்பட்டதோ, வேண்டியதோ இல்லை. காரணம் எதுவும் இல்லாமலே அடிக்கிற வாத்தியார் பள்ளிக்கு வராமல் இருக்க கடவுளிடம் வேண்டியதும் இல்லை. பெரியார் பற்றியோ அவரது சாதி மறுப்பு, வாழ்வியல் கொள்கைகள் பற்றியோ அப்பா எங்களிடம் அந்த வயதில் பேசியதில்லை. அம்மா, அப்பா எந்த கடவுளை வழிப்படவோ, வெறுக்கவோ இல்லை. அவர்களுக்கும் அதனால் அச்சமோ, துக்கமோ எதுவும் ஒட்டிகொள்ளவும் இல்லை.

பெரியப்பா வீட்டிலும் எந்த தெய்வங்களின் சிலையோ, படங்களோ இல்லை. அவர் இஸ்லாமியனும் அல்ல. எந்த கோவிலுக்கு செல்லும் பழக்கமும் இல்லை. சொந்தங்கள் பலர் கிறிஸ்தவர்கள், பலர் நட்டார் வழக்கியல் தெய்வங்களை வழிபடுபவர்கள். திருப்பதிக்கோ, காஞ்சிபுரத்திற்கோ அவர்கள் சென்றதில்லை. அவர்களே அவர்களது கோவில்களில் வழிபாடு நடத்தினர். குடும்ப நண்பர்கள் பலர் இஸ்லாமியர்கள். சொந்தத்தில் ஒருவர் இஸ்லாமியர். எனது தாத்தாவின் நெருங்கிய நண்பர் பார்க்க காந்தி மாதிரி உருவமுடன் இருப்பர், அவர் இஸ்லாமியன் என பல ஆண்டுகள் வரை அறிந்ததில்லை. அவரை காந்தித் தாத்தா என தான் நாங்கள் குறிப்பிட்டோம். திருமணங்களில் மதவேறுபாடு இல்லாமல் கலந்துகொண்டிருக்கிறோம்.
ஒரே குடும்பத்தில் கணவன் எந்த மதமும் இல்லாமலும், மனைவி கிறிஸ்தவ பெண்ணாகவும் இருந்தவர் பலர். அல்லது கணவன் கிறிஸ்தவனாக, மனைவி மண்ணின் தெய்வங்களை வழிபட்டார்.

எங்கள் வீட்டிலிருந்தபடியே பக்கத்து சாமுண்டீஸ்வரி கோயிலின் சுப்பிரபாதமும், மசூதியின் வாங்கும், தேவாலயத்தின் பிரார்த்தனையும் என்னை இழுக்கவில்லை. ஆனால் அவையெழுப்பிய ஒலி இனியதாக இருந்தன. காலையில் பாட்டு சத்தம் கேட்கும் போது சில நேரம் தொந்தரவாகவும் இருந்தது. வீட்டில் கடிகாரங்கள் இல்லாததால் மசூதியின் வாங்கும், சுப்ரபாதமும், பாடலும் தான் அதிகாலையிலேயே எங்களை எழுப்பி படிக்க வைக்க அம்மாவுக்கு உதவியாக இருந்தது. அனைத்தும் ஒருசேர கேட்பதில் ஒருவித இனிமையும் இருந்தது.

மசூதியின் வாங்கு சாப்பாட்டு வேளை நெருங்குவதையும், அதிகாலையிலேயே எழுந்து அப்பா வேலைக்கு செல்ல அறிவிப்பையும் எங்களுக்கு தந்தது. திருவிழா காலங்களில் மசூதியின் ஓதுதலும், குரான் பற்றிய உரைகளும் காதில் விழுந்திருக்கின்றன. அந்த விழாக்களில் கலகலப்பாக என்னைப் போன்றவர்கள் புத்தாடையில் திரிந்ததை பார்க்க சுகமாக இருந்தது. தூரத்தில் இருக்கிற ஒரு அம்மன் கோவிலிலிருந்து வருடம் ஒருமுறை வரும் யானை ஆறாட்டு (ஊர்வலமாக யானை மீது சாமியை வைத்து ஆற்றுக்கு கொண்டு போகும் நிகழ்ச்சி) பார்க்க ரோட்டோரம் சென்று வேடிக்கை பார்த்ததுண்டு. அப்போதும் கடவுள் பற்றிய எந்த விடயமும் கேட்டதில்லை. யானையையும், அதன் நெற்றியில் ஒளிர்ந்த வண்ணமான நெற்றிப்பட்டத்தையும் வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றோம். தேவாலய திருவிழா நடக்கும் போது நாடகம் பார்த்திருக்கிறேன்.

இப்படியாக நேற்று வரை எங்கள் சிறுவயது வாழ்க்கை இனிதாக இருந்தது! இன்று 'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.

°°°°°°°

14 பின்னூட்டங்கள்:

கலை said...

மதங்களே இல்லாத நிலைதான் நன்றாக இருக்குமென்று தோன்றுகின்றது. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இன்று
'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்
திரு!
இப்போ மனம் குழம்பிவிட்டதா???
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.
யோகன் பாரிஸ்

தருமி said...

திரு,
//'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.//

இனி வேதனையும் வேடிக்கையும் ஒரு சேர கிடைக்கும்..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

//'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.//

இனி மேல் மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் போன்ற சொல்லாடல்கள் அர்த்தமற்றுப் போகும்.

அசுரன் said...

//இப்படியாக நேற்று வரை எங்கள் சிறுவயது வாழ்க்கை இனிதாக இருந்தது! இன்று
'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.//

இந்த ஒற்றை வரி மிக வீரியமானது....

இதே அனுபவம்தான் எனதும்.....

மத வெறி பன்றிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்ட உளறவும் ஒரு குரூப் அலையுது..... உங்கள் பள்ளியில் விழுந்த கல்களையெல்லாம் அவர்கள் மண்டையில் போட வேண்டும்

அசுரன்

Anonymous said...

நல்ல பதிவு திரு,

சாதி, மதம் போன்ற எண்ணங்கள் பின்சு உள்ளங்களில் ஏர்படுதும் பாதிப்பை மிக அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

Sivabalan said...

திரு

நல்ல பதிவு!!

மனிதன் மாறிவிட்டான்.. மதத்தில் ஏறிவிட்டான்...

சரியாதான் சொல்லியிருக்கிறார்கள்...

hai said...

மதம் என்பது நாம் விரும்பி உடுக்கும் ஆடை மாதிரிதான் இருக்க வேண்டும்.வகைகளும் வண்ணங்களும் மாறினாலும் நோக்கம் நம் உடலை மறைப்பதுதானே.எந்த மதமாயினும் இறைவன் என்ற நம்பிக்கைதானே ஆதாரம் இதில் ஏன் ஏற்றத்தாழ்வு? இதற்கேன் இவ்வளவு கலவரங்கள்?

thiru said...

// கலை said...
மதங்களே இல்லாத நிலைதான் நன்றாக இருக்குமென்று தோன்றுகின்றது. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.//

மதம் வேறு! ஆன்மீகம் வேறு. வருகைக்கு நன்றி கலை.

// Johan-Paris said...
//இன்று 'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்//
திரு!
இப்போ மனம் குழம்பிவிட்டதா???
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.
யோகன் பாரிஸ்//

யோகன்,

சம்பவம் நடந்த அன்றும் அதை தொடர்ந்த பல வருடங்களும் குழப்பம் இருந்தது. இன்றைய நிலையில் மதம் பற்றி குழப்பமில்லை.

thiru said...

// Dharumi said...
திரு,
//'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.//

இனி வேதனையும் வேடிக்கையும் ஒரு சேர கிடைக்கும்..//

உண்மை தான்!

//செந்தில் குமரன் said...
//'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.//

இனி மேல் மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் போன்ற சொல்லாடல்கள் அர்த்தமற்றுப் போகும்.//

ஆம் செந்தில்! நாகரீகம் என்பது என்ன என்பதில் சமூக குழப்பமாக இருக்கிறதோ?

thiru said...

// அசுரன் said...
//இப்படியாக நேற்று வரை எங்கள் சிறுவயது வாழ்க்கை இனிதாக இருந்தது! இன்று
'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.//

இந்த ஒற்றை வரி மிக வீரியமானது....

இதே அனுபவம்தான் எனதும்..... //

அது தான் உண்மை.

//
மத வெறி பன்றிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்ட உளறவும் ஒரு குரூப் அலையுது..... உங்கள் பள்ளியில் விழுந்த கல்களையெல்லாம் அவர்கள் மண்டையில் போட வேண்டும்

அசுரன்//

அசுரன், உங்கள் கோபம் புரிகிறது. கல் அவர்கள் மனதில் விழட்டும். மனங்கள் மாறட்டும். வருகைக்கு நன்றி தோழரே!

thiru said...

//Anonymous said...
நல்ல பதிவு திரு,
சாதி, மதம் போன்ற எண்ணங்கள் பின்சு உள்ளங்களில் ஏர்படுதும் பாதிப்பை மிக அழகாக சொல்லி இருக்கின்றீர்கள். 1/17/2007 03:18:00 PM//

//Sivabalan said...
திரு
நல்ல பதிவு!!
மனிதன் மாறிவிட்டான்.. மதத்தில் ஏறிவிட்டான்...
சரியாதான் சொல்லியிருக்கிறார்கள்...
1/17/2007 03:34:00 PM //

ஆம். மதங்களே இல்லாமல் இருந்தால்?

thiru said...

// தமிழச்சி said...
மதம் என்பது நாம் விரும்பி உடுக்கும் ஆடை மாதிரிதான் இருக்க வேண்டும்.வகைகளும் வண்ணங்களும் மாறினாலும் நோக்கம் நம் உடலை மறைப்பதுதானே.எந்த மதமாயினும் இறைவன் என்ற நம்பிக்கைதானே ஆதாரம் இதில் ஏன் ஏற்றத்தாழ்வு? இதற்கேன் இவ்வளவு கலவரங்கள்?//

சிந்திக்க நல்ல கேள்வி தமிழச்சி. சடங்குகளும், அடையாளங்களுமா நம்பிக்கையின் அடிப்படை? ம்ம்

nila said...

suvaiyana soodana unmai

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com