Monday, January 15, 2007

போகியும், பூனை கதையும்

நேற்றைய தினம் போகிப் பண்டிகையில் சென்னை நகரமே புகைமண்டலமாக மாறியது. சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள், வாகனங்களின் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தையும் தீயிட்டு கொழுத்துவது வழக்கம். நேற்றும் அப்படித் தான் சென்னையின் காற்று மண்டலம் அசுத்தமாக்கியிருக்கிறது. பழையனவற்றை எரிப்பதும், புதியன சேர்ப்பதும் தானே போகி. பழைய பொருட்களை எரிக்காமல் என்ன செய்வது என பலர் கேட்கின்றனர். பழையன கழைதல் என்பது எதை கழைவது?

இது பற்றிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

******
ஒரு மடத்தின் குரு தனது சீடர்களுடன் பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒரு நாள் பிரார்த்தனை செய்யும் போது மடத்திலிருந்த பூனை குறுக்கே ஓடிய படியே கவனத்தை சிதறடித்தது. தனது சீடர்களை அழைத்து பூனையை பிடித்து ஒரு கூடையில் அடைத்து வைக்க சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். பூனையின் தொல்லையில்லாமல் பிரார்த்தனை தொடர்ந்தது.

அதன் பின்னர் தினமும் பிரார்த்தனை தொடங்கும் முன்னர் பூனையை பிடித்து கூடையில் அடைப்பது வழக்கமானது. ஆண்டுகள் பல கடந்து சீடர்கள் கற்றவற்றை செயல்படுத்த சென்றனர். பூனை இறந்து போனது. மடத்திற்கு புதிய சீடர்கள் வந்திருந்தனர்.

பிரார்த்தனைக்காக குரு தயாராக இருந்தார். சீடர்கள் கையில் ஒரு பூனையும், கூடையுமாக காலதாமதமாகி வந்தனர். கூடையால் பூனையை மூடிய பின்னர் பிரார்த்தனைக்கு தயாரனார்கள்.

"ஏன் இவ்வளவு காலதாமதம்?" குரு.

"குருவே! பூனையை தேடி ஊரெங்கும் அலைந்தும் கிடைத்தபாடில்லை. இப்போது தான் தெருக்கோடியில் குப்பைகளுக்கருகிலிருந்து பூனை ஒன்று கிடைத்தது" என்றனர் சீடர்கள்.

"பூனை எதற்கு?" குரு.

"பிரார்த்தனைக்கு முன்னர் பூனையை கூடையில் மூடிவைப்பது மடத்தின் வழக்கமல்லவா குருவே!" பணிவாக சீடர்கள்.

"இந்த வழக்கம் இப்போது அவசியமானதா?" குரு.

"முன்னோர் நமது நல்லவற்றிற்காக தானே இந்த வழக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் குருவே!"

"முன்னோர்கள் வாழ்ந்த காலமும், சூழலும் நமது சூழலும் ஒன்றா? எதற்கு அவசியமில்லாத வீண் சடங்குகள்? இந்த பூனையையும், உங்கள் மனதில் இருக்கும் பூனையையும் அதன் இடத்திலேயே விட்டு வாருங்கள்! இன்றைய பிரார்த்தனை முடிந்தது" எழுந்து நடக்கலானார் குரு.

சீடர்கள் பூனையுடன் குப்பை கூடையை நோக்கி நடந்தனர்.

**********
பூனைகளை விட்டு எப்போது நாம் வெளியேறுவோம்?

வருடம் முழுவதும் உழைத்து சேர்த்த செல்வத்தை மறுவருட துவக்கத்தில் தீயிட்டு கொழுத்திவிடும் நிலையிலா நம் நாடு இருக்கிறது? போகியை பொருளியல் பார்வையில் கடைபிடிக்க ஆரம்பித்தால் நாட்டிலுள்ள அனைத்து பழைய பொருட்களையும் தீயிலிட வேண்டியது தான். பல கோடி மக்கள் உணவு, உடை எதுவுமற்று இருக்கும் நாட்டில் இப்படி தீயிலிடுவது இன்றைய காலத்திற்கு பொருந்தாத செயல். அடையாளத்திற்காக சில பழைய பொருட்களை மட்டுமே எரிப்பதாக இருந்தாலும், அது பழைய சடங்கை விடாமல் தொடரும் முறை தானே தவிர இதில் வேறொன்றுமில்லை.

ஆண்டாண்டு காலங்களாய் சக மனிதர்களை இழிபிறவிகளாக, சாதி, மத, பிற கொடுமைகளை நிகழ்த்தும் மனதின் பழைய அழுக்குகளை கழைவது எப்போது? பழமையான வேண்டாத சாத்திரங்களை தொடர்ந்தபடியே பொருட்களை மட்டும் எரிப்பதால் என்ன பயன்? ஆண்டின் துவக்கத்தில் சமுதாயத்திற்கு உதவாத பழங்கருத்துக்களை கழைந்து விட்டு, புதிய சிந்தனையுடன் வாழ்வை தொடர்வது தான் போகியின் உள்ளார்ந்த பொருள்.

நமக்கு உண்மையான போகி எப்போது?

17 பின்னூட்டங்கள்:

மணியன் said...

கதையும் விளக்கமும அருமை. போகியின் உண்மையான பொருளை எடுத்துரைத்தது. வேண்டாத சடங்குகளையும் மன /சமூக அழுக்குகளையும் தீயிலிட்டு கொளுத்துவோம். புதிய எண்ணங்களை வரவேற்போம்.

தமிழ்நதி said...

வாருங்கள் நண்பரே! இந்த வார நட்சத்திரம் நீங்கள் என்று அறிகிறோம். முடிந்தால் நீங்கள் ஆற்றும் பணிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.

Anonymous said...

போகி எல்லாம் எங்கள் ஊரில் குறைவு.ஏன் பொங்கலே குறைவுதான்.ஆனால் நீங்கள் சொன்ன கதையும் கருத்தும் அருமை.இப்படிதான் பல விஷயங்களில் கண்மூடிதனமாக நடக்கின்றோம்.
//பழையன கழைதல் என்பது எதை கழைவது?//
மனதில் உள்ள எல்லாம் அழுக்குக்களையும் கழைதால் நன்றாக இருக்குமே!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் காலத்திற்கேற்றவாறு மாற வேண்டும். மக்களிம் மனநிலையும் தான்.

மலைநாடான் said...

திரு!

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

bala said...

//நமக்கு உண்மையான போகி எப்போது?//

திரு அய்யா,

உண்மையான பொங்கலுக்கு முந்திய தினம் தான் உண்மையான போகி.

பாலா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மை.கண்மூடித்தனமாக பழக்கங்களை பின்பற்றுவது போகவேண்டும்.அடுத்த தலைமுறைக்கு
வழக்கங்களின் அறிவியல் காரணங்களோடு புரியவைத்து, தேவையல்லாதவற்றை விட்டுவிட சொல்லலாம்.

சிவபாலன் said...

திரு

நல்லாயிருக்கு!!

கலை said...

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் திரு. காலத்திற்கேற்றபடி, சூழ்நிலைக்கேற்றபடி அவசியமற்ற சடங்குகளை ஒதுக்கி விடுவது நல்லதுதான்.

thiru said...

//மணியன் said...
கதையும் விளக்கமும அருமை. போகியின் உண்மையான பொருளை எடுத்துரைத்தது. வேண்டாத சடங்குகளையும் மன /சமூக அழுக்குகளையும் தீயிலிட்டு கொளுத்துவோம். புதிய எண்ணங்களை வரவேற்போம்.//

இது தான் இன்றைய காலத்திற்கு அவசியம் மணியன்.

//tamilnathy said...
வாருங்கள் நண்பரே! இந்த வார நட்சத்திரம் நீங்கள் என்று அறிகிறோம். முடிந்தால் நீங்கள் ஆற்றும் பணிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.//

என்ன வாசகர் விருப்பமா? :)

// துர்கா said...
ஆனால் நீங்கள் சொன்ன கதையும் கருத்தும் அருமை.இப்படிதான் பல விஷயங்களில் கண்மூடிதனமாக நடக்கின்றோம்.
//பழையன கழைதல் என்பது எதை கழைவது?//
மனதில் உள்ள எல்லாம் அழுக்குக்களையும் கழைதால் நன்றாக இருக்குமே!//
மனங்களை தூய்மையாக்கினால் உலகம் தானாகவே தூய்மையாகும். அப்படித்தானே? :))

// செந்தில் குமரன் said...
நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் காலத்திற்கேற்றவாறு மாற வேண்டும். மக்களிம் மனநிலையும் தான்.//

உண்மை தான் செந்தில் குமரன்.

---
நன்றி மலை நாடான்!

thiru said...

//bala said...
//நமக்கு உண்மையான போகி எப்போது?//

திரு அய்யா,

உண்மையான பொங்கலுக்கு முந்திய தினம் தான் உண்மையான போகி.
பாலா//

நல்ல நகைச்சுவை! வழக்கம் போலவே :))

//லட்சுமி said...
உண்மை.கண்மூடித்தனமாக பழக்கங்களை பின்பற்றுவது போகவேண்டும்.அடுத்த தலைமுறைக்கு
வழக்கங்களின் அறிவியல் காரணங்களோடு புரியவைத்து, தேவையல்லாதவற்றை விட்டுவிட சொல்லலாம்.//

உங்கள் எண்ணங்கள் நிறைவேறட்டும். வருகைக்கு நன்றி லட்சுமி!

-------

நன்றி சிவபாலன், கலை!

Machi said...

/பழையனவற்றை எரிப்பதும், புதியன சேர்ப்பதும் தானே போகி. பழைய பொருட்களை எரிக்காமல் என்ன செய்வது என பலர் கேட்கின்றனர்/

பழச எல்லாம் எரிப்பார்களோ?

பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிப்பதை முதலில் தடை செய்யவேண்டும்.

எங்க ஊர் பக்கம் இந்த எரிக்கிற பழக்கம் இல்லை. வீட்டையும், வீட்டிலுள்ள பொருட்களையும் கழுவி சுத்தப்படுத்துவோம், போகியை காப்பு கட்டு என்று சொல்லுவோம்.

வசந்த் said...

திரு அவர்களே,

எங்கள் கிராமத்திலும் இந்த எரிக்கிற பழக்கம் இல்லை. இது போன்ற ஒவ்வாத சடங்குகளை விடுவதே நல்லது.

நல்ல பதிவு. அருமையான கதை.

நன்றி
வசந்த்

bala said...

திரு அய்யா,

"போகியும்,பூனையும்" கதை ,
ஜெயலலிதா அம்மா சொன்ன "மஞ்ச துண்டு பெருச்சாளியும்,மருத்துவர் சுண்டெலியும்" கதை மாதிரி ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது.வாழ்த்துக்கள்.

கூடிய சீக்கிரமே, நமக்கு உண்மையான போகியையும்,உண்மையான பூனையையும் காணும் பாக்கியம் கிடைக்கும்னு நம்பிக்கை வைப்போம்.

பாலா

thiru said...

//குறும்பன் said...
பழச எல்லாம் எரிப்பார்களோ?//
:)

//பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிப்பதை முதலில் தடை செய்யவேண்டும்.//
ஆமாம். சுற்றுப்புற தூய்மைக்கு இது அவசியமானது.

வருகைக்கு நன்றி குறும்பன்!

thiru said...

//வசந்த் said...
திரு அவர்களே,

எங்கள் கிராமத்திலும் இந்த எரிக்கிற பழக்கம் இல்லை. இது போன்ற ஒவ்வாத சடங்குகளை விடுவதே நல்லது.

நல்ல பதிவு. அருமையான கதை.//

வருகைக்கு நன்றி வசந்த்!

//bala said...
திரு அய்யா,

கூடிய சீக்கிரமே, நமக்கு உண்மையான போகியையும்,உண்மையான பூனையையும் காணும் பாக்கியம் கிடைக்கும்னு நம்பிக்கை வைப்போம்.//

சரிங்க :)

╬அதி. அழகு╬ said...

பூனை கதை நன்று.

//பழையன கழைதல் என்பது எதை கழைவது?//

'பழையன கழிதல்' அல்லது 'களைதல்' என்பதே சரி.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com