Wednesday, January 17, 2007

ஈழம்: ஓரு இந்தியனின் கண்ணோட்டம்

அன்பு நண்பர்களே!

நம் நாட்டில் அவ்வப்போது நடக்கிற குண்டுவெடிப்புகளில் அச்சமும், பரிதவிப்பும், கோபமும் என உணர்வுகளின் கலவையாக நமது மனம் மாறுகிறது. நமக்கு அருகில் இருக்கும் ஒரு தீவில் ஓயாத குண்டுவெடிப்புகளும், வான்வெளிதாக்குதலும்,பொருளாதாரத் தடைகளுமாக பல இலட்சம் மக்களின் வாழ்வு அவலமாக இருக்கிறது. இதைப் பற்றி சக மனிதர்கள் நாம் தெரிந்துகொள்வது அவசியமானது. பிரதான ஊடகங்களின் செய்தி அறிக்கைகளில் ஒளிந்திருக்கிற சூட்சுமம் புரியாது அவை விற்கும் செய்திகளே உண்மை என நம்பிவிடுகிறோம். அதையொட்டி நாம் நம்புகிறவை சில வேளைகளில் தீர்வாக அமைந்துவிடுவதில்லை. கடந்த, நிகழ்கால வரலாற்றை அறிந்த பின்னர் நமது முடிவுகளை தெரிவிப்பது மட்டுமே ஒரு இனப்பிரச்சனையின் சிக்கலுக்கு உதவும்.

ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய அறிவு நமக்கு சரியான அளவு தெரியவில்லை என சில நண்பர்கள் சென்னையில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோது தெரிவித்தனர். ஈழப்பிரச்சனை பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதினால் அடிப்படை விடயங்களை தெரிந்துகொள்ள நன்றாக இருக்கும் என நண்பர் ஒருவர் தெரிவித்தார். அவரது தூண்டுதலின் விளைவாகவே இந்த தொடர் கட்டுரையை எழுதுகிறேன். நான் ஈழத்தமிழன் இல்லை. இலங்கையில் எந்த பகுதியிலும் வாழவும் இல்லை. இந்த பிரச்சனையை 1983 முதல் அறிந்து வருகிறவன் என்ற முறையிலும், ஈழத்தமிழர்கள், சிங்களவர்கள் என இரு இனமக்களிடம் பழகியவன் என்ற முறையிலும் நான் அறிந்தவற்றை எழுதுகிறேன்.

குறுகிய கால வரலாற்றை மட்டும் தெரிந்து கொள்வதால் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை சரியாக புரிந்து கொள்ள இயலாது.
ஏற்கனவே முன்முடிவு செய்த ஒரு தீர்வு திட்டத்துடன் இனப்பிரச்சனையின் வரலாற்றை படிப்பதுவும் தவறான பாதைக்கு செல்ல மட்டுமே வழிவகுக்கும்.
இனப்பிரச்சினைக்கு இவை இரண்டும் அடிப்படையான விடயங்கள். அந்த அடிப்படையில் ஈழத்தமிழர் பற்றிய சில வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் பார்வையை இந்த தொடர் கட்டுரையில் பார்ப்போம். இவற்றில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் ஆராய்ந்து உண்மையாக இருப்பின் திருத்தம் செய்கிறேன். மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரிவித்தால் இந்த சிறுமுயற்சிக்கு உதவியாகவும் இருக்கும்.

நன்றி!

***********

நாடு பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்த பின்னரும் அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக விடுதலையை ஆதிக்கமனப்பான்மையில் இழந்து நிற்கிறது இலங்கை தேசம். கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிற இன விடுதலை போராட்டத்தில் ஈழத்தமிழர் தரப்பு, சிங்கள தரப்பு என இரு வேறு அரசியல், இராணுவ, பொருளாதார, நிர்வாக தலைமை இலங்கைத் தீவில் இன்று காணப்படுகிறது.

தமிழர்கள் பூர்வீக குடிகளா? இந்த இனப்பிரச்சனைக்கு காரணமென்ன?

வரலாற்றுப் பின்னணி
கி.மு. 3000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கடல்கோழ் உருவாகி லெமூரியா கண்டம் துண்டுகளாகியது. கடல்கோழ் வீழுங்கிய நிலம் போக உருவான நிலபரப்பில் இந்தியா துணைக்கண்டமானது. அதன் அருகில் அழகிய தீவு ஒன்று உருவானது. இன்றைய இலங்கை தென்னிந்தியாவுடன் கடல்கோழுக்கு முன்னர் பூகோள ரீதியாக இணைந்திருந்ததற்கு பால்க் முனைப்பகுதி சான்றாக விளங்குகிறது.

இலங்கைத் தீவில் கி.பி. 1 முதல் 9ம் ஒன்றாம் நூற்றாண்டு வரை கந்தோரடையை தலைமையிடமாக கொண்டு ஈழமண்டல ஆட்சி நடந்துள்ளது. கி.பி.10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்றும் 11ஆம் நூற்றாண்டின் பின் முற்பகுதியில் சோழர் ஆட்சி நிலவியதாகச் வரலாற்று சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

போர்த்துக்கீசியர் இலங்கை மீது படையெடுத்த போது யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி வன்னிய மன்னர்கள் ஆட்சி செய்ததாக கருதப்படுகின்றது. இந்த ஆட்சி சில காலம் தென்னிலங்கை வரை நீண்டிருந்தது. கி.பி 13ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை நீடித்த இந்த ஆட்சியை தான் யாழ்ப்பாண இராட்சியம் என அழைக்கின்றனர். தமிழர்களும் இலங்கைத்தீவின் மண்ணின் மைந்தர்கள் என்பதற்கான சான்றுகளாக இவை அமைகின்றன. அதே வேளை தென்னிலங்கையில் சிங்கள மன்னர்களது ஆட்சி நடந்திருக்கிறது. ஆங்கிலேயர் படையெடுப்பில் தமிழ்மன்னன் பண்டார வன்னியன் வீழ்ச்சியோடு யாழ்ப்பாண ஆட்சி முடிவுக்கு வந்தது.

"பிரித்தானியர் 1796 இல் இலங்கைக்கு வந்தபோது இங்கு மூன்று அரசுகள் இருந்தன. பொதுவான நிர்வாக முறைக்கு வசதியாக பிரித்தானியர் இலங்கையை ஒரே நாடாக்கினர். 1832 கோல்புறுக் சீர்த்திருத்தத்தையடுத்து இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஒரு நிர்வாக அமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது." என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் வீரகேசரி இதழுக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். காலனியாதிக்கத்தில் பிரித்தானியா செய்த ஒற்றையாட்சி முறையில் தமிழர்களது ஆட்சியும், சிங்கள ஆட்சியும் இணைக்கப்பட்டது இதிலிருந்து தெரிகிறது. தமிழர்கள் இலங்கையில் பூர்வீகமாக தங்களது ஆட்சியை கொண்டிருந்தனர் என்பது இதன் வழி தெரிகிறது.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவிலிருந்து தமிழர்களை காப்பி, தேயிலை, இரப்பன் தோட்ட வேலைக்காக 19, 20ம் நூற்றாண்டில் அனுப்பி வைத்தனர். அவர்கள் இந்திய வம்சாவழி தமிழர்களாக கருதப்படுகின்றனர். இந்தியாவை போல இலங்கையிலும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைக்கான போராட்டங்கள் வலுவடைந்தன. தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து போராடி நாடு விடுதலையடைந்தது.

கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் இலங்கை 4, பெப்ருவரி 1948ல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றது. வழக்கம் போல பெரும்பான்மை (சிங்கள) இனத்திடம் சிறுபான்மையினரை (தமிழர்களை) அடகு வைத்து பிரித்தானியா காலனியாதிக்க தவறை இலங்கையிலும் செய்தது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் சிறுபான்மையினரை தனது ஒற்றை தேசியத்தில் அடக்கி வைக்க சிங்கள தரப்பு பல விதமாக முனைந்தது. அதன் தொடர் விளைவுகள் இரு இன மக்கள் மனங்களிலும் நீங்காத காயங்களை உருவாக்கி இரு துருவங்களாக மாற்ற காரணமானது. திட்டமிட்டு நடத்தப்பட்ட பல கலவரங்கள், அதற்கு துணையாக பரப்பப்பட்ட வதந்திகள், அச்ச உணர்வு காரணமாக இரு வேறு திசையில் சிங்கள, தமிழர் அரசியல் வாழ்வு பரிணமித்தது.

1956 இனக்கலவரம்
1956 "சிங்களம் மட்டும்" சட்டத்தை சிங்கள தேசியவாத பிரதமர் S.W.R.D பண்டாரநாயகே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இந்த சட்டப்படி சிங்களம் மட்டுமே அலுவலக மொழியாக அறிவிக்கப்பட்டது. மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதினராக இருந்த தமிழர்களது தாய்மொழியில் பேசவும், கல்வி பயிலவும், அலுவலக தொடர்பு கொள்ளவும் ஏற்பட்ட தடை தமிழர்களை கொதிப்படைய வைத்தது. தமிழர் தரப்பு தந்தை.S.J.V. செல்வநாயகம் தலைமையில் "சிங்களம் மட்டும்" சட்டத்தை எதிர்த்து சுமார் 300 தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். சிங்கள பிக்குகள் முன்னணினர் காலணி முகத்திடலுக்கு ஊர்வலமாக சென்று அங்கேயிருந்த தமிழ்த் தொண்டர்கள் பலரைத் தாக்கி, சிலரைத் தூக்கி நாடாளுமன்றத்திற்கு அண்மையிலுள்ள பெய்ரா ஏரியில் போட்டனர். சிங்கள காவல்த்துறை இவற்றை கண்டும் காணாமலே இருந்தது. தமிழர் போராட்ட நெருக்கடியின் விளைவாக பிரதமர்.பண்டாரநாயகே தமிழர் தரப்புடன் 1957ல் "தமிழ் பேசப்பட்டு வருகிற வடகிழக்கு இலங்கையில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும்" என்ற 'பண்டாரநாயகே - செல்வநாயகம் ஒப்பந்தத்தை' ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து சிங்கள தேசியவாத கூட்டத்தினரின் மிரட்டலால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

தமிழர்கள் அரசியல் வாழ்வை மாற்றிய 1958 கலவரம்:
பிரித்தானிய கடற்படையின் திரிகோணமலை தளம் மூடப்பட்டதையொட்டி வேலையாட்களாக இருந்த 400 தமிழர்கள் வேலையிழந்தனர். அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க பொலனருவா மாவட்டத்தை அரசாங்கம் தேர்வு செய்தது. சிங்கள இனவெறியினர் இதை எதிர்த்தனர். மே மாதம் சிங்கள கும்பல்கள் தமிழர்கள் மீது தாக்கவும், தமிழர்களுக்கு எதிரான கலவரத்தையும் உருவக்க துவங்கினர். கரும்பு தோட்டங்களில் வேலை பார்த்த தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதில் 8 மாத கர்ப்பமாக இருந்த ஒரு தமிழ் பெண்ணின் வயிற்றை கத்தியால் கிழித்து உயிருடன் இரத்தம் சிதற துடிதுடிக்க கொன்றனர். 25 மே இரவு மட்டும் சுமார் 70 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட சும்மார் 3000 சிங்கள வெறியர்களை கட்டுப்படுத்த முனைந்த பொலனருவா பகுதியில் இருந்த காவல் நிலையத்தின் காவலர்களும் தாக்குதலுக்கு ஆளானர். மறுநாள் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட 25 இராணுவ வீரர்கள் 3000 கலவரக்காரர்களை சந்திக்க இயலாது தவித்தது.

மே 26ல் நுவரேலியா மேயர் செனெவிரத்னே மரணத்தை தொடர்ந்து கலவரம் உருவானதாக தவறான தகவலை பிரதமர் பண்டாரநாயகே அறிவித்தார். உண்மையில் கலவரம் மூன்று நாட்களுக்கு முன்னரே நடக்க துவங்கியது. இந்த அறிவிப்பால் தமிழர்கள் தான் கலவரத்திற்கு காரணம் என பொய்யான பரப்புரை ஏற்பட்டு கொழும்புவில் தமிழர்கள் மீது கலவரம் கட்டவிழ்ந்தது. கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. பனதுரா பகுதியில் பரப்பப்பட்ட வதந்தியின் காரணமாக இந்து கோவிலுக்கு தீ வைக்க கலவர கும்பல் முனைந்து தீ பரவாததால் கோவில் அர்ச்சகரை இழுத்து சென்று உயிருடன் எரித்தார்கள்.

சிங்கள வெறி கும்பல் ஆண்களில் காதணி அணிந்தவர்கள், சட்டையை வெளியே விட்டவாறு காற்சட்டை அணிந்தவர்கள், சிங்கள பத்திரிக்கை படிக்க இயலாதவர்கள் என தமிழர்களை இனங்கண்டு தாக்க துவங்கினர். இதில் ஆங்கிலம் மட்டுமே பேசி வந்த சிங்களர்களும் தாக்கப்பட்டனர். காவலர்கள் போல் உடை தரித்து தமிழர்களை ஒழிந்து கொள்ள சொல்லிவிட்டு அவர்களது வீடு, கடைகளில் கொள்ளையடித்தனர்.

இப்படியாக கலவரம் கட்டற்ற மதம் பிடித்த யானை போல தறிகெட்டு நாடெங்கும் பரவியது. இந்த ஆபத்தான சூழலிலும் நல்ல மனதும், மனிதாபிமானமும் கொண்ட சில சிங்கள குடும்பங்கள் அண்டை வீட்டு தமிழர்களை தங்களது வீடுகளில் பாதுகாத்தனர்.

கலவரத்திற்கு பழிவாங்கும் விதமாக கிழக்கு பகுதியில் தமிழர்களும் தாக்குதலை துவங்கினர். மோட்டார்களில் பயணம் செய்த சிங்களர்களை அடித்து துவைத்தனர். 56 அப்பாவி சிங்கள மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இது சம்பந்தமான உயிரிழப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் புத்த நாக விகாரை ஒன்றை தமிழர்கள் தரப்பு தகர்த்தது.

இந்த கலவரங்களை தொடர்ந்து மே 27ல் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பெடரல் கட்சியும், ஜாதிக விமுக்தி பெர்மனுனா கட்சியும் தடை செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் நாடெங்கும் அமைதியை இராணுவம் உருவாக்கியது. அரசின் நடவடிக்கையற்ற நேரத்தில் A.M.முத்துகுமாரு (Tamil Chief of Staff) என்னும் தமிழரின் துறை ரீதியான நடவடிக்கை பல்லாயிரம் தமிழர்களை காப்பாற்றியதாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குள் 12000 தமிழர்கள் அகதிகளாக கொழும்பு பகுதிக்கு மட்டும் வந்திருந்தனர். நாடு முழுவதிலிருந்தும் இராணுவம் விலக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருந்தது. இந்த கலவரங்களின் தமிழர்கள் மத்தியிலும், சிங்களர்கள் மத்தியிலும் மனக்காயங்களை உருவாக்கியிருந்தது. இந்த காலப்பகுதியில் திரு.வேலுபிள்ளை பிரபாகரன் சிறுவனாக இருந்தார். இந்த கலவரங்கள் தன்னை பிற்கால அரசியல் நிலைபாடுகளுக்கு நகர்த்தியதாக பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

(தொடர்வேன்)

17 பின்னூட்டங்கள்:

வெற்றி said...

திரு,
நல்ல முயற்சி. பராட்டுக்கள்.

/*கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் இலங்கை 4, பெப்ருவரி 1948ல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றது.*/

இக் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Jay said...

உண்மைகளை எழுதும் உங்களுக்கு நன்றிகள்!
http://thamizhblog.blogspot.com/2006/11/48.html

விழிப்பு said...

ஒரு நல்ல முயற்சி.

என் போன்ற ஆரம்ப நிலையில் உள்ளோருக்கு மிகவும் பயன் உள்ளது.

தொடர்ந்து எழுதுங்கள்.

கலை said...

நல்லதொரு ஆய்வுக் கட்டுரை. தொடருங்கள்.

இலங்கைத் தமிழர்களில் சிலருக்கே (யாரும் சண்டைக்கு வந்து விடப் போகின்றார்கள், நான் என்னைப் போன்றவர்களும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சொல்கின்றேன்), இவ்வளவு விரிவாக விடயங்கள் தெரியாமல் இருக்கலாம்.

இது விடயமாக தொடரப் போகும் உங்கள் கட்டுரையை எதிர் பார்த்திருக்கின்றேன்.

தருமி said...

தொடருக்கு நன்றியும், வாழ்த்தும்.

thiru said...

//வெற்றி said...
திரு,
நல்ல முயற்சி. பராட்டுக்கள்.

/*கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் இலங்கை 4, பெப்ருவரி 1948ல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றது.*/

இக் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.//

வெற்றி,

கடுமையான என்ற பதம் சரியில்லை தான். விடுதலைக்கான் போராட்டங்கள் நடந்தன என்பது உண்மையே. இதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்பிகிறேன். திருத்தம் இருப்பின் அறியத்தாருங்கள்.

thiru said...

//mayooresan மயூரேசன் said...
உண்மைகளை எழுதும் உங்களுக்கு நன்றிகள்!
http://thamizhblog.blogspot.com/2006/11/48.html//

நன்றி மயுரேசன்!

விழிப்பு! said...
ஒரு நல்ல முயற்சி.
என் போன்ற ஆரம்ப நிலையில் உள்ளோருக்கு மிகவும் பயன் உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள். //

நன்றி விழிப்பு! தொடர்வேன்.

thiru said...

//கலை said...
நல்லதொரு ஆய்வுக் கட்டுரை. தொடருங்கள்.
இலங்கைத் தமிழர்களில் சிலருக்கே (யாரும் சண்டைக்கு வந்து விடப் போகின்றார்கள், நான் என்னைப் போன்றவர்களும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சொல்கின்றேன்), இவ்வளவு விரிவாக விடயங்கள் தெரியாமல் இருக்கலாம்.

இது விடயமாக தொடரப் போகும் உங்கள் கட்டுரையை எதிர் பார்த்திருக்கின்றேன்.//

இந்திய மக்களிலும் பெரும்பாலானவர்களுக்கு தங்களது நாட்டின் 'உண்மையான' நிலை, வரலாறு தெரிவதில்லை. தெரிந்துகொள்ள முயல்வோம். நன்றி!

thiru said...

//Dharumi said...
தொடருக்கு நன்றியும், வாழ்த்தும்.//

நன்றி அய்யா!

Anonymous said...

அருமையான பதிவு..தொடர்ந்து எழுதுங்கள்..படிக்க ஆவலாய் உள்ளளம்...

Anonymous said...

விரிவான கட்டுரைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புடன் திருவுக்கு!
வெற்றியின் கருத்தே ,அவ்விடயத்தில் என் கருத்தும் ;இந்தப் பெரிய இந்தியாவுக்கே சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்ட பிரித்தானியா அப்படியே இலங்கைக்கும் கொடுத்தது. இது தான் உண்மை.
அடுத்து அன்றைய தமிழ்த் தலைவர்களின் பதவி ஆசையும் ,இன்றைய நிலைக்குக் காரணம் என்பதே!!
நான் சிறுவனாக இருந்த போது;வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொண்டது.
மலையகத் தமிழர்களுக்கு வாக்கில்லாமல் செய்ததற்குக் கையுயர்த்தி; பதிவியைக் காப்பாற்றியதும் மகா தவறு என்பதும் ;பலர் கருத்து.
தங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

திரு!

நல்ல முயற்சி. உங்கள் பார்வையில் மேலும் தொடருங்கள். தொடர்ந்து செல்லும்போது, முரண்களைத் தெரிவிக்கின்றோம். பொலனறுவை, பானந்துறை, எனும் பெயர்களைச் சரியாக மாற்றம் செய்துவிடுங்கள்.

பதிவுக்கு நன்றி.

Unknown said...

திரு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

http://internetbazaar.blogspot.com

Anonymous said...

History of SL from BBC

Timeline Srilanka
http://news.bbc.co.uk/2/hi/south_asia/1166237.stm

வசந்தன்(Vasanthan) said...

முயற்சிக்கு நன்றியும் வாழ்த்தும்.
யாழ்ப்பாண இராச்சியம் வேறு, வன்னி இராச்சியம் வேறு.
யாழ்ப்பாண இராச்சியம் சங்கிலியனின் காலத்தில் 1505 இல் முடிவுக்கு வருகிறது.
ஆனால் வன்னி இராச்சியம் அதன்பின்னும் நீடிக்கிறது.

வசந்தன்(Vasanthan) said...

மேற்குறிப்பிட்ட பின்னூட்டத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் முடிவு 1505 என்று தவறுதலாக வந்துவிட்டது.
அது கிட்டத்தட்ட 1619 என்று வரவேண்டும்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com